தரவரிசை

முஸ்தபா முஸ்தபா படத்தின் திரைவிமர்சனம்

Published On 2026-03-07 08:04 IST   |   Update On 2026-03-07 08:04:00 IST
  • சதீஷ் தனது வழக்கமான இயல்பான நடிப்பில் கதையை தாங்கிச் செல்கிறார்.
  • கருணாகரன் தனது டைமிங் வசனங்களால் சிரிப்பை ஏற்படுத்துகிறார்.

கதை:

தனியார் தொலைக்காட்சி சேனலில் பணியாற்றும் சதீஷ், டாக்டராக இருக்கும் மோனிகா சின்னகொட்லாவை காதலிக்கிறார். இரு குடும்பங்களும் இந்த காதலை ஏற்றுக்கொண்டு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. திருமணத்திற்கு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், சதீஷ் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகிறது.

இந்த விஷயம் காதலிக்கு தெரிந்தால் திருமணம் நின்றுவிடும் என்ற பயத்தில், அந்த வீடியோவை எப்படியாவது இணையத்தில் இருந்து நீக்க முயற்சி செய்கிறார் சதீஷ். இறுதியில் சதீஷின் முயற்சி வெற்றி பெற்றதா? அந்த வீடியோவை யார் வெளியிட்டார்கள்? அதன் பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்:

படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் சதீஷ் தனது வழக்கமான இயல்பான நடிப்பில் கதையை தாங்கிச் செல்கிறார். காதல், பொய், அதனால் வரும் பிரச்சனை, அதை சரி செய்யும் முயற்சி என பல நிலைகளில் அவர் தனது கதாபாத்திரத்தை சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

சதீஷின் நண்பராக நடித்துள்ள சுரேஷ் ரவி, படம் முழுவதும் அவருடன் பயணிக்கும் முக்கியமான கதாபாத்திரமாக இருக்கிறார். காமெடி காட்சிகளில் சதீஷுடன் சேர்ந்து பல இடங்களில் சிரிக்க வைக்கிறார். கருணாகரன் தனது டைமிங் வசனங்களால் சிரிப்பை ஏற்படுத்துவதோடு, கதையின் முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரமாகவும் கவனம் ஈர்க்கிறார்.

நாயகியாக நடித்துள்ள மோனிகா சின்னகொட்லா கதையின் தொடக்கமும் இறுதியிலும் மட்டும் வந்து சென்று இருக்கிறார். சுரேஷ் ரவியின் ஜோடியாக நடித்துள்ள மானசா செளத்ரிக்கும் பெரிய இடம் இல்லை. சாம்ஸ், லிவிங்ஸ்டன், உமா, புகழ், சூப்பர் குட் சுப்பிரமணி உள்ளிட்டவர்கள் சில காட்சிகளில் வந்து சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்கள்.

இயக்கம்:

நாயகன் ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொண்டு, நண்பர்களின் உதவியுடன் அதிலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் கதையை கலகலப்பாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் பிரவீன் சரவணன். முதல் பாதியில் வரும் நகைச்சுவை காட்சிகள் படத்தை சுறுசுறுப்பாக நகர்த்தினாலும், இரண்டாம் பாதியில் அதே பாணி தொடர்வதால் சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது.

ஒளிப்பதிவு:

ஒளிப்பதிவாளர் கே.எஸ்.விஷ்ணு ஸ்ரீ படம் முழுவதையும் கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இசை:

எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட்டின் இசையில் பாடல்கள் கமர்ஷியல் பாணியில் இருக்கிறது. பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்ப பயணிக்கிறது.

மாலைமலர் ரேட்டிங் : 2.5 / 5

Tags:    

Similar News