செய்திகள்
ஏரி அருகே தீ பிடித்து எரிந்ததால் புகை மூட்டம் காணப்பட்டது

கொடைக்கானல் ஏரி அருகே திடீர் தீ விபத்து: சுற்றுலா பயணிகள் ஓட்டம்

Published On 2017-04-13 06:38 GMT   |   Update On 2017-04-13 06:38 GMT
கொடைக்கானல் ஏரி அருகே ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
கொடைக்கானல்:

கொடைக்கானல் பகுதியில் பகல் நேரத்தில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதனால் மரங்கள் மற்றும் புற்கள் கருகி வருகின்றன. இந்த காய்ந்த சருகுகள் மீது யாரேனும் சிகரெட் பிடித்து அணைக்காமல் போட்டாலும் தீ விபத்து ஏற்பட்டு விடுகிறது.

எனவே கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு இது போன்ற முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. இருந்த போதும் சிலர் தெரியாமலும் மேலும் சிலர் தெரிந்தும் தீ வைத்து சென்று விடுகின்றனர்.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் நிலவும் கடுமையான கோடை வெப்பத்தில் இருந்து விடுபட கொடைக்கானலுக்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். நேற்று ஏரியில் படகு சவாரி செய்வதற்காக அவர்கள் காத்திருந்தனர்.

அப்போது கொடைக்கானல்- வத்தலக்குண்டு சாலையில் நகராட்சி நாய் கருத்தடை மையத்தின் அருகே இருந்த புதர்களில் தீ விபத்து ஏற்பட்டது. உடனே அங்கிருந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சுமார் ½ மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் அங்கிருந்த வீடுகளுக்கும், ஓட்டல்களுக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

ஏரி அருகே தீ பிடித்து எரிந்ததால் புகை மூட்டம் காணப்பட்டது.

Similar News