செய்திகள்

பெண்கள் மீது தாக்குதல்: ஏ.டி.எஸ்.பி. மீதான புகார் குறித்து டி.ஐ.ஜி. விசாரணைக்கு உத்தரவு

Published On 2017-04-12 06:44 GMT   |   Update On 2017-04-12 08:09 GMT
மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பெண்கள், பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய தடியடி சம்பவம் தொடர்பாக டி.ஐ.ஜி. தீபக் தாமோர் விசாரணை நடத்த உள்ளார்.
கோவை:

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பெண்கள், பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

அதனை படம் பிடித்த பத்திரிகையாளர்களையும் போலீசார் தாக்கினர். போலீசாரின் இந்த செயலுக்கு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், அய்யம்பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரி (45) என்ற பெண்ணின் கன்னத்தில் காட்டுமிராண்டித்தனமாக ஓங்கி அறைந்த காட்சிகள் வாட்ஸ்அப்பில் வேகமாக பரவுகிறது.

இதை பார்க்கும் அனைவரும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பாரியிடம் கேட்டபோது, தடியடி சம்பவம் தொடர்பாக டி.ஐ.ஜி. தீபக் தாமோர் விசாரணை நடத்துவார் என்றார்.

Similar News