செய்திகள்

திருமணத்திற்கு பெற்றோர் மறுப்பு: பிளஸ்-2 மாணவி காதலனுடன் தற்கொலை

Published On 2017-04-12 10:52 IST   |   Update On 2017-04-12 10:52:00 IST
சுங்குவார்சத்திரத்தில் காதல் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலனுடன், பிளஸ்-2 மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஸ்ரீபெரும்புதூர்:

சுங்குவார்சத்திரம் குளக்கரை தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகள் புவனேஸ்வரி (வயது 17). பன்னூரில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். தற்போது ஆண்டு இறுதி தேர்வு எழுத இருந்தார்.

இவரும் அதே பகுதி வேளாங்கண்ணி நகரை சேர்ந்த ஜமீலும் (24) கடந்த 2 ஆண்டாக காதலித்து வந்தனர். பேரம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஜமீல் பஸ்சில் செல்லும் போது புவனேஸ்வரியுடனான காதலை வளர்த்து வந்தார்.

காதல் விவகாரம் இருவீட்டு பெற்றோருக்கும் தெரிய வந்தது. ஆரம்பத்தில் இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் புவனேஸ்வரியின் பெற்றோர் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த வாரத்தில் அவர்கள் மீண்டும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது பற்றி ஜமீல் அவர்களிடம் கேட்ட போது கண்டித்ததாக தெரிகிறது. இதனால் காதல் ஜோடி கவலை அடைந்தனர்.

நேற்று மாலை புவனேஸ்வரியின் பெற்றோர் அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். வீட்டில் புவனேஸ்வரி மட்டும் தனியாக இருந்தார்.

இது பற்றி அறிந்த ஜமீலும் அங்கு வந்தார். வாழ்வில் ஒன்று சேரமுடியாத அவர்கள் தற்கொலை செய்ய முடிவு செய்தனர்.

இருவரும் மின்விசிறி கொக்கியில் ஒரே துப்பட்டா வால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இரவு நீண்ட நேரத்திற்கு பின்னர் புவனேஸ்வரியின் பெற்றோர் வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது புவனேஸ்வரியும், ஜமீலும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து சுங்குவார் சத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து 2 போரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காதல்ஜோடி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News