செய்திகள்

ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது நியாயமானது: ஜி.கே.வாசன்

Published On 2017-04-11 10:32 GMT   |   Update On 2017-04-11 10:32 GMT
ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது நியாயமானது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.





சிதம்பரம்:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சிதம்பரத்துக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற இருந்த இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணியோடு த.மா.கா. இணைந்து செயல்பட்டு, வெற்றி பெறும் நிலையில் இருந்தது. டி.டி.வி.தினகரன் அணியினர் பணத்தை காட்டி மக்களை ஏமாற்றும் வகையில் வாக்குகளை சேகரித்தனர்.

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் கண்டுபிடித்து, அதற்கான ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்தது நியாயமானது தான். இந்த முடிவை தேர்தல் ஆணையம் தாமதமாக எடுத்துள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் நடந்தால் ஓ.பன்னீர்செல்வம் அணி, தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட சிறுகுறு விவசாயிகளுக்கு தமிழக அரசு பாரபட்சமின்றி நிவாரணம் வழங்கவேண்டும்.

நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் பிரதமர் நரேந்திரமோடி விவசாயிகளை சந்தித்து பேச தயக்கம் காட்டி வருகிறார்.

கடல் நீர் உட்புகுவதை தடுக்க கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்களது நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News