மனைவி இறந்த வேதனையில் கணவர்-மாமியார் விஷம் குடித்து பலி
பரங்கிப்பேட்டை:
நாகை மாவட்டம் பொறையார் கிராமத்தை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 45). சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி வாணி (40). இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்குட்பட்ட முத்தையா பாலிடெக்னிக் கல்லூரியில் பகுதிநேர ஆசிரியராக வேலை செய்து வந்தார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. இவர்கள் பரங்கிப்பேட்டை அருகே உள்ள மீதிக்குடி கிராமத்தில் வசித்து வந்தனர். அவர்களுடன் ராம்குமாரின் தாய் மங்கையற்கரசியும் உடன் இருந்து வந்தார்.
வாணிக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது வாணிக்கு ரத்தபுற்றுநோய் இருப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ராம்குமாரும், மங்கையற்கரசியும் வாணியுடன் தங்கியிருந்து கவனித்து வந்தனர்.
வாணியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. வீட்டுக்கு அழைத்து செல்லுங்கள் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதையொட்டி மீதிக்குடி கிராமத்துக்கு வாணியை அழைத்து வந்தனர்.
நேற்று காலை வாணி படுத்திருந்த அறைக்கு சென்று ராம்குமாரும், மங்கையற்கரசியும் பார்த்தனர். அப்போது ரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வாணி இறந்துகிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
துக்கம் தாங்காமல் ராம்குமாரும், மங்கையற்கரசியும் கண்ணீர் விட்டு கதறினர். வாணி இறந்ததும் உயிர்வாழ அவர்கள் விரும்பவில்லை. தாயும், மகனும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். பின்னர் ராம்குமாரும், மங்கையற்கரசியும் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தனர். சிறிது நேரத்தில் இருவரும் பரிதாபமாக இறந்தனர். பொதுமக்கள் கிள்ளை போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று ராம்குமார், வாணி, மங்கையற்கரசி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இன்று மாலை 3 பேரின் உடல்களும் மீதிக்குடி கிராமத்தில் உள்ள அவர்களது வீட்டுக்கு கொண்டுவரப்படுகிறது. தகவல் அறிந்து அவர்களது உறவினர்கள் மீதிக்குடி கிராமத்துக்கு வந்து அழுதனர். அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.