விவசாயிகளுக்கு ஆதரவாக 6-ந்தேதி முதல் தொடர் போராட்டம்: தா.பாண்டியன் பேட்டி
நாகப்பட்டினம்:
நாகையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் தா.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் வறட்சி ஏற்பட்டு குளங்கள், ஆறுகள், ஏரிகளில் தண்ணீரின்றி காணப்படுகிறது. மரங்கள் பட்டுபோய் உள்ளன. குடிநீர் கிடைக்காமல் உயிரினங்கள் அவதிப்படுகின்றன. பருவ மாற்றத்தினை முன்பே அறிந்து தமிழக அரசு திட்டமிடவில்லை. ஆர்.கே. நகர் தொகுதியில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. பெயரைக்கூட பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு சட்ட அதிகாரம் கொடுத்தது யார்?. அ.தி.மு.க. சின்னம் முடக்கப்படும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர்கள் 2 வாரத்திற்கு முன்பே கூறுகிறார்கள்.
முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றும், எந்தவித விசாரணையும் இன்றி மீண்டும் அவருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தமிழக மக்களை பாதுகாக்க வேண்டும். தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த வேண்டும்.
விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் இதுவரை வந்து சேரவில்லை. இதை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் வருகிற 6-ந்தேதி (வியாழக்கிழமை) முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும். 60 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் பிரச்சினை நடைபெற்று வருகிறது. இதற்கு ஒரேதீர்வு கச்சத்தீவை மீட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் பாண்டியன், சிறுபான்மை பிரிவு மாநில துணை தலைவர் தமீம் அன்சாரி, இளைஞர்பெருமன்ற மாவட்ட செயலாளர் பாஸ்கர் உள்பட பலர் உடனிருந்தனர்.