செய்திகள்

மகளை கடித்த பாம்பை ஆஸ்பத்திரிக்கு பையில் கொண்டு வந்த விவசாயி

Published On 2017-03-29 11:15 GMT   |   Update On 2017-03-29 11:15 GMT
மகளை கடித்த பாம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு பையில் போட்டுக் கொண்டு விவசாயி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூர்:

கடலூர் முதுநகர் அருகே உள்ள வசந்தராம்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி அய்யப்பன். இவரது மகள் சிவசக்தி(வயது 11). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இன்று காலை 6 மணியளவில் சிவசக்தி வீட்டில் படுத்திருந்தாள். அப்போது வீட்டுக்குள் புகுந்த பாம்பு மாணவி சிவசக்தி காலில் கொத்தியது. அதிர்ச்சியடைந்த சிவசக்தி அலறிதுடித்தாள். அலறல் சத்தம் கேட்டு அய்யப்பன் ஓடிவந்தார்.

வீட்டுக்குள் பாம்பு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அது மீண்டும் மாணவி சிவசக்தியை கடிக்க முயன்றது. வெகுண்டெழுந்த அய்யப்பன் அங்கு கிடந்த தடியை எடுத்து பாம்பை அடித்துக் கொன்றார்.



பின்னர் சிவசக்தியை கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தார். அப்போது சிவசக்தியை கடித்த பாம்பை ஒரு பையில் போட்டு எடுத்து வந்தார். அந்த பாம்பை ஆஸ்பத்திரியில் உள்ள டாக்டரிடம் காட்டினார்.

சிவசக்தியை கடித்த பாம்பு எந்த வகையை சார்ந்தது. அது வி‌ஷத்தன்மை உள்ளதா? என்பதை டாக்டர்கள் அறிந்து கொள்வதற்காக பாம்பை கொண்டு வந்தேன் என்று அய்யப்பன் கூறினார். டாக்டர்கள் பாம்பை பார்த்தனர்.



பின்னர் சிவசக்திக்கு சிகிச்சை அளித்தனர். அவர் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிவித்தனர். இதைகேட்டு சிவசக்தியின் பெற்றோர் நிம்மதியடைந்தனர்.

அரசு ஆஸ்பத்திரிக்கு விவசாயி பையில் பாம்புடன் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News