செய்திகள்

மீனவரை சுட்டுக்கொன்ற இலங்கை கடற்படை வீரரை இந்தியா அழைத்து வர ஐகோர்ட்டில் வழக்கு

Published On 2017-03-18 05:22 GMT   |   Update On 2017-03-18 05:22 GMT
ராமேசுவரம் மீனவர் பிரிட்ஜோவை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படை வீரரை இந்தியாவுக்கு அழைத்து வரக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மதுரை:

ராமேசுவரத்தை சேர்ந்த டிட்டோ என்பவரது படகில் சென்ற மீனவர்கள் 6 பேர், இந்திய கடல் எல்லையில் ஆதம் பாலம் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து வந்த சிங்கள கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ பலியானார். மற்றொரு மீனவர் சரோன் படுகாயம அடைந்தார்.

இந்த சம்பவத்தை கண்டித்து பிரிட்ஜோவின் உடலை வாங்காமல், தங்கச்சி மடத்தில் மீனவர்கள் ஒரு வாரம் போராட்டம் நடத்தினார்கள். பின்னர் மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உறுதி அளித்ததால் போராட்டத்தை கைவிட்டு, பிரிட்ஜோவின் உடலை அடக்கம் செய்தனர்.

இந்த நிலையில் ராமநாதபுரம் சேதுபதி நகரை சேர்ந்த ராஜூ என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-



இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோ குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பிரிட்ஜோவை சுட்டுக்கொன்ற இலங்கை கடற்படை வீரர் யார்? என்பதை கண்டறிந்து அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து தண்டிக்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்திய எல்லையில் மீன் பிடித்தாலும் தமிழக மீனவர்களை தாக்குகின்றனர். இதனை தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த மனு வருகிற திங்கட் கிழமை விசாரணைக்கு வருகிறது.

Similar News