செய்திகள்

கூடங்குளம் அணுமின் நிலைய 2-வது அணுஉலை நிறுத்தம்

Published On 2017-03-14 04:46 GMT   |   Update On 2017-03-14 04:46 GMT
கூடங்குளம் அணுமின் நிலைய 2-வது அணு உலையில் ‘டைனமிக் டெஸ்ட்’ நடத்துவதற்காக நேற்று இரவு முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
நெல்லை:

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் 2 அணு உலைகள் மூலம் இந்தியாவிலேயே அதிகபட்சமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

முதலாவது அணு உலையில் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. 2-வது அணு உலையில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. முதல் அணு உலையில் தயார் செய்யப்படும் மின்சாரம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகம், பாண்டிசேரி ஆகிய மாநிலங்களுக்கு வணிக ரீதியில் பிரித்து வழங்கப்படுகிறது.

2-வது அணு உலையில் இன்னும் வணிக ரீதியில் மின் உற்பத்தி செய்யப்படவில்லை. தற்போது சோதனை அடிப்படையில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு மத்திய மின் தொகுப்புக்கு அனுப்பப்பட்டு வந்தது.

இந்த நிலையில் 2-வது அணு உலையில் ‘டைனமிக் டெஸ்ட்’ நடத்துவதற்காக நேற்று இரவு முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனை முடிந்து 2-வது அணு உலையிலும் வணிக ரீதியான மின் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதற்காக அணு உலையை நிறுத்தி மின் உற்பத்தியை அதிகப்படுத்தியும், குறைத்தும் பல்வேறு வகையான ‘டைனமிக் டெஸ்ட்’ நடத்தப்பட்டு வருகிறது.

இந்த பணிகளை கூடங்குளம் அணுமின் நிலைய இயக்குனர் ஷாகு மேற்பார்வையில் விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த பரிசோதனை முடிந்து விரைவில் 2-வது அணு உலையில் வணிக ரீதியான மின் உற்பத்தி தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News