நாகை மீனவர்கள் 5-வது நாளாக வேலை நிறுத்தம்: மீன் வர்த்தகம் பாதிப்பு
நாகப்பட்டினம்:
கடந்த 6-ந்தேதி இந்திய- இலங்கை இடையிலான ஆதம்பிரிட்ஜ் என்ற இடத்தில் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் மீனவர் பிரிட்ஜோ (வயது 21) என்பவர் உயிரிழந்தார்.
மேலும், 3 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும் குறித்து நாகை அக்கரைப்பேட்டை சமுதாய கூடத்தில் நாகை தாலுகா மீனவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நாகை பகுதியில் உள்ள மீனவ கிராமங்களை சேர்ந்த பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த தங்கச்சிமடம் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் மீனவர் இறந்ததால் இலங்கை கடற்படையினருக்கு கண்டனம் தெரிவித்தும், தொடர்ந்து தமிழக மீனவர்களை அச்சுறுத்தி வரும் இலங்கை கடற்படையை கண்டித்தும், மீனவர்களை பாதுகாக்க தவறுகின்ற மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் நாகை தாலுகா மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாகை தாலுகா மீனவர்கள் இன்று 5-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இந்த வேலை நிறுத்தத்தில் நாகை தாலுகாவில் சுமார் ஆயிரத்து 600 விசைப்படகுகள் மற்றும் 8 ஆயிரத்து 100 பைபர் படகுகளை வைத்துள்ள மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் நாகையில் மீன் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒவ்வொரு நாளும் 5 கோடி முதல் 8 கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 6 மாவட்ட மீனவர்களும் 13-ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் அறிவித்துள்ளதால் மீன் விலை அதிகரிப்பதோடு ஏற்றுமதியும் பாதிக்கப்படும்.