செய்திகள்

இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு: ஒப்பாரி போராட்டத்தில் மூதாட்டி உயிரிழப்பு

Published On 2017-03-09 08:41 IST   |   Update On 2017-03-09 08:41:00 IST
நல்லாண்டார் கொல்லையில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த ஒப்பாரி போராட்டத்தில் மூதாட்டி ஒருவர் பரிதாபமாக இறந்தார். மேலும் 2 பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. நெடுவாசலில் நாடியம்மன் கோவில் முன்பு மரத்தடியிலும், நல்லாண்டார் கொல்லையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றின் அருகேயும், வடகாட்டில் பஸ் நிறுத்தம் அருகேயும் போராட்டம் நடந்து வருகிறது.



நல்லாண்டார் கொல்லையில் நேற்று 21-வது நாளாக போராட்டம் நீடித்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எண்ணெய் எடுத்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றின் அருகே அமர்ந்து நேற்று காலை பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.

ஒப்பாரி போராட்டத்தில் கோஷமிட்டபடி இருந்த போது நெடுவாசல் கிராமத்தை சேர்ந்த ஆதவன் மனைவி பொன்னம்மாள் (வயது 65), நல்லாண்டார் கொல்லையை சேர்ந்த லட்சுமி, மலர் ஆகிய 3 பேரும் திடீரென மயக்கமடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



அருகில் இருந்தவர்கள் உடனடியாக தண்ணீர் எடுத்து வந்து மயக்கமடைந்தவர்களின் முகத்தில் தெளித்தனர். இதில் லட்சுமி, மலர் ஆகிய 2 பேரும் சகஜ நிலைக்கு திரும்பினர். ஆனால் பொன்னம்மாள் மயக்கத்தில் இருந்து சகஜ நிலைக்கு திரும்பவில்லை. இதையடுத்து சிகிச்சைக்காக அவரை பொதுமக்கள் காரில் ஏற்றி நெடுவாசல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.

அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு காரில் கொண்டு செல்லும் வழியில் பொன்னம்மாள் பரிதாபமாக இறந்தார். இயற்கை எரிவாயு திட்டத்திற்கு எதிராக தொடரும் போராட்டத்தில் மூதாட்டி ஒருவர் பலியானது நல்லாண்டார்கொல்லை மற்றும் நெடுவாசல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News