செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற போது மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பலி

Published On 2017-03-08 08:49 IST   |   Update On 2017-03-08 08:49:00 IST
தாம்பரம் மதுரவாயல் பைபாஸ் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற கம்ப்யூட்டர் என்ஜினீயர் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் கீழே விழுந்து பலியானார். தந்தை கண்முன் இந்த சம்பவம் நடந்துள்ளது.
தாம்பரம்:

சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் சிவபிரகாஷ் (வயது 40), நீலாங்கரையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்துவந்தார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், தனலட்சுமி (13), விஜயலட்சுமி (9) என்ற மகள்களும் உள்ளனர்.

சிவபிரகாசுக்கு சேலையூர் அருகே அகரம் தென்கிராமத்தில் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு பட்டா வாங்குவது தொடர்பாக தந்தை சந்திர சேகருடன் நேற்று மாலை அங்கு சென்றுவிட்டு கொளத்தூருக்கு தாம்பரம்-மதுர வாயல் பைபாஸ் சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.

மோட்டார் சைக்கிளை சிவபிரகாசம் ஓட்டிச்செல்ல பின்னால் அவரது தந்தை சந்திரசேகரன் உட்கார்ந்து இருந்தார். அனகாபுத்தூர் அடையாறு ஆற்றுபாலம் அருகே சென்றபோது காற்றாடி மாஞ்சா நூல் குறுக்கே சென்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் மாஞ்சா நூல் சிவபிரகாஷ் கழுத்தை அறுத்தது.

கழுத்தில் ரத்தம் வழிய நிலைதடுமாறிய சிவபிரகாஷ் சாலை இரும்பு தடுப்பில் மோதி விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.


காயமடைந்த சந்திரசேகர்

தந்தை சந்திரசேகர் லேசான காயத்துடன் தப்பினார். இந்த சம்பவம் தொடர்பாக சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிவபிரகாஷ் உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

காற்றாடி மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து வாகனங்களில் செல்பவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றதால் சென்னையில் மாஞ்சா நூல் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடைபெற்று இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனகாபுத்தூர் பகுதியில் வாலிபர்கள் சிலர் காற்றாடி பறக்கவிட்டபோது அதில் ஒரு காற்றாடி நூல் அறுந்து பைபாஸ் சாலையில் சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. காற்றாடி பறக்கவிட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News