செய்திகள்

நெல்லிக்குப்பம் அருகே கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் ரூ.11 லட்சம் நகை-பணம் கொள்ளை

Published On 2017-03-01 14:49 IST   |   Update On 2017-03-01 14:49:00 IST
நெல்லிக்குப்பம் அருகே கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் ரூ.11 லட்சம் நகை-பணத்தை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லிக்குப்பம்:

கடலூரை அடுத்த நெல்லிக்குப்பம் மருதாடு விநாயகர்கோவில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 75). நிலக்கிழார். இவரது மனைவி தேவா(69). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

அவர்கள் வெளியூரில் வசித்து வருகிறார்கள். பாலகிருஷ்ணன் நேற்று இரவு 8 மணிக்கு வீட்டில் இருந்து திருப்பதிக்கு புறப்பட்டு சென்றார். இதையடுத்து வீட்டில் அவரது மனைவி தேவா தனியாக இருந்தார்.

வீட்டின் உள்பகுதியில் உள்ள அறையில் இரவு அவர் படுத்து தூங்கினார்.

இதை நோட்டமிட்ட 2 மர்மவாலிபர்கள் நள்ளிரவு 2.30 மணியளவில் அங்கு வந்தனர். அவர்கள் முகத்தை துணியால் மறைத்திருந்தனர். வீட்டின் முன்பக்க கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.

பின்னர் வீட்டின் கதவை கடப்பாரையால் உடைத்து உள்ளே புகுந்தனர். வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையாக சென்று டார்ச் லைட் அடித்து பார்த்தனர். வீட்டின் பின்பகுதியில் பூட்டிக்கிடந்த அறைக்கதவை திறந்தனர். உள்ளே தேவா படுத்திருந்தார்.

கொள்ளையர்கள் வந்ததை பார்த்ததும் அவர் திடுக்கிட்டு எழுந்தார். மர்ம வாலிபர்கள் அவரிடம் சத்தம்போட்டால் கொன்று விடுவோம் என்று கத்தியை காட்டி மிரட்டினர்.

பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இவைகளின் மதிப்பு ரூ.11 லட்சம் ஆகும்.

இந்தகொள்ளை சம்பவம் குறித்து நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

நெல்லிக்குப்பம் அருகே சித்தரசூரில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்த சந்தானலட்சுமியை தாக்கி நகை-பணத்தை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நெல்லிக்குப்பம் அருகே மருதாடு பகுதியில் நேற்று இரவு வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டி தேவாவை கத்தியை காட்டி மிரட்டி மீண்டும் முகமூடி கொள்ளையர்கள் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

சித்தரசூரில் கொள்ளையடித்ததும் மருதாடு பகுதியில் கொள்ளை யடித்ததும் ஒரே கும்பலாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். கொள்ளையர்கள் ஒரே பகுதியில் முகாமிட்டு கொள்ளை அடித்து வருவது போலீசுக்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ளது.

நெல்லிக்குப்பம் பகுதியில் தொடர்ந்து நடைபெற்ற இந்தகொள்ளை சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லிக்குப்பம் பகுதியில் தொடர்ந்து நடைபெற்ற இந்தகொள்ளை சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் மர்ம கும்பலை பிடிக்க போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News