செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டம்: புதுக்கோட்டை மாவட்டத்தில் தீவிரம் அடையும் போராட்டம்

Published On 2017-02-25 12:22 IST   |   Update On 2017-02-25 12:22:00 IST
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் போராட்டம் தீவிரமடைகிறது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.இதை எதிர்த்து அப்பகுதி பொதுமக்கள், சமூக அமைப்பினர், பல்வேறு கட்சியினர், மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசியல் கட்சி தலைவர்கள் பலர் நெடுவாசலுக்கு நேரிடையாக சென்று பொதுமக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் வரதராஜன் ஆகியோர் நெடுவாசல் கிராமத்திற்கு வந்து ஆதரவு தெரிவித்தனர். மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடா விட்டால் பொதுமக்களை திரட்டி தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினார்.

நேற்று நெடுவாசலில் எண்ணை படிமம் உள்ள இடத்தை பார்வையிட வந்த பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி நிருபர்களிடம் கூறும் போது, ஹைட்ரோ கார்பன் எனும் எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதித்துள்ள திட்டத்துக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும். இதை வலியுறுத்தி மார்ச் 3-ந்தேதி பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.

இதனிடையே இன்று காலை பள்ளி-கல்லூரி மாணவர்கள் சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பேரணி நடத்தினர். மேலும் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் ஜான் பாண்டியன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் நெடுவாசலில் எரிவாயு சோதனை மேற்கொள்ளப்பட்ட இடத்தில், புதுக்கோட்டை சப்-கலெக்டர் அம்ரித் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அத்திட்டம் தொடர்பாக விவசாயிகள் மற்றும் வருவாய்த்துறையினரிடம் விளக்கங்களை கேட்டறிந்தார். ஆய்வின் போது கறம்பக்குடி வட்டாட்சியர் யோகேஸ்வரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

நெடுவாசலுக்கு வரும் அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வரும் நிலையில், நேற்று சப்-கலெக்டர் ஆய்வு செய்ததையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அப்பகுதி விவசாயிகள் கூறும் போது, இது போன்ற திட்டம் டெல்டா மாவட்டத்தில் செயல்படுத்த வந்த போது தான் அதன் பாதிப்பு எல்லோருக்கும் தெரிந்தது. அந்த திட்டத்திற்கு எதிராக நாங்களும் போராடினோம். அப்படியான திட்டம் எங்கள் ஊருக்கும் வரும் போது எங்களுக்கு ரொம்ப அச்சமாக உள்ளது.

இந்த திட்டத்தால் விவசாயத்தை முற்றிலும் அழிக்கும் நிலை உருவாகிறது. எனவே இந்த திட்டத்தை செயல்படுத்த விடாதவாறு போராட்டங்கள் நடத்துவோம். நாளை 26-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது என்றனர்.

Similar News