செய்திகள்

நாகை நகராட்சியில் பன்றிகளை பிடிக்க வந்த தொழிலாளி வெட்டிக் கொலை: 10 பேர் கும்பல் வெறிச்செயல்

Published On 2017-02-23 10:47 GMT   |   Update On 2017-02-23 10:47 GMT
நாகை நகராட்சியில் பன்றிகளை பிடிக்க வந்த தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

நாகப்பட்டினம்:

நாகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பன்றிகளை பிடிப்பதற்காக நகராட்சி நிர்வாகம் சார்பில் மயிலாடுதுறை வரதாச்சாரியார் தெருவை சேர்ந்த ராஜா (35) உள்பட 11 பேர் வரவழைக்கப்பட்டனர்.

இவர்கள் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக நாகையில் தங்கி அக்கரைப் பேட்டை, கீச்சாங்குப்பம், தோணித்துறை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பன்றிகளை பிடித்து வந்தனர்.நேற்று நாகை கொத்தள தெருவில் பன்றிகளை பிடிப்பதற்காக ராஜா உள்ளிட்டோர் ஒரு மினி வேனுடன் சென்றனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த சிலரின் எதிர்ப்பையும் மீறி பன்றிகளை பிடித்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் ராஜா தரப்பினரை தாக்க தொடங்கினார்கள். இதனால் அனைவரும் மினி வேனில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

ஆனாலும் ஆத்திரம் தீராத சுமார் 10 பேர் 6 இரு சக்கர வாகனங்களில் பயங்கர ஆயுதங்களுடன் வேனை துரத்தி சென்றனர். கிழக்கு கடற்கரை சாலையில் தனியார் மோட்டார் கம்பெனி அருகில் மினி வேன் வந்த போது அதனை மறித்தனர்.வேனை அடித்து நொறுக்கினர்.

இதனால் பயந்து போன பன்றி பிடிக்கும் தொழிலாளர்கள் கீழே இறங்கி ஓடினர். அப்போது ராஜாவை வழிமறித்து பிடித்து அவரது கழுத்தில் வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே இறந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் நாகை டவுன் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். ராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

10 பேர் கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

Similar News