செய்திகள்

அமைச்சர் துரைக்கண்ணு-எம்.எல்.ஏ. வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு

Published On 2017-02-21 13:39 GMT   |   Update On 2017-02-21 13:39 GMT
சசிகலா அணியை ஆதரித்த அமைச்சர், 2 எம்.எல்.ஏ.க்கள் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:

தமிழக சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்வதற்காக கூவத்தூர் சொகுசு விடுதியில் சசிகலா அணியை சேர்ந்த 122 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்கினர். அவர்களை தொகுதிக்கு செல்ல அனுமதிக்காமல் கட்டாயப்படுத்தி சிறை வைத்ததாக தகவல் வெளியானது. கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கியிருந்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்று சசிகலா அணியை சேர்ந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களித்து அவரை வெற்றி பெற செய்தனர்.தொகுதி மக்களுடைய கருத்துகளை கேட்காமல், தன்னிச்சையாக முடிவு எடுத்து சசிகலா அணியை ஆதரித்ததால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சசிகலா அணியை சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடைய வீடு, அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ரெங்கசாமி ஞாயிற்றுக்கிழமை தஞ்சை வந்தார். நேற்று அவர் சென்னை புறப்பட்டு சென்றார். இவருக்கு பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு இல்லை என்பதால் தனக்கு பாதுகாப்பு வேண்டாம் என போலீசாரிடம் கூறினார். ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆனால் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்படவில்லை.

பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான துரைக்கண்ணு வீடு, எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கும், பேராவூரணி தொகுதி எம்.எல்.ஏ. கோவிந்தராசு வீடு, எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. சேகர் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் என்று கூறியதால் வீடு, அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்படவில்லை.

Similar News