செய்திகள்

அ.தி.மு.க.அலுவலகத்தை கைப்பற்றிய அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள்

Published On 2017-02-13 08:00 GMT   |   Update On 2017-02-13 08:00 GMT
விழுப்புரத்தில் அ.தி.மு.க.அலுவலகத்தை கைப்பற்றிய அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
விழுப்புரம்:

முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முக்கிய நிர்வாகிகளை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா கட்சியை விட்டு நீக்கி வருகிறார்.

விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளராக இருந்த லட்சுமணன் எம்.பி. நேற்று சென்னையில் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

இதையடுத்து லட்சுமணன் எம்.பி.யை மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து சசிகலா உடனடியாக நீக்கினார். மேலும் விழுப்புரம் வடக்கு மாவட்ட புதிய செயலாளராக அமைச்சர் சி.வி.சண்முகத்தை நியமித்தார்.

தகவல் அறிந்ததும் அமைச்சரின் ஆதரவாளர்கள் விழுப்புரத்தில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

விழுப்புரம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்துக்கு சென்றனர்.அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்தனர்.

கட்சி அலுவலகத்தை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அ.தி.மு.க.கட்சி அலுவலகம் யாருக்கு சொந்தம் என்று பிரச்சினை ஏற்படுவதற்குள் கட்சி அலுவலகத்தை அமைச்சரின் ஆதரவாளர்கள் கைப்பற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மாவட்ட துணை செயலாளர் அற்புதவேல், மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி துணைத்தலைவர் ராமதாஸ், ஒன்றிய செயலாளர்கள் சேரன், பக்தவச்சலம், முன்னாள் ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர் பால்ராஜ், முன்னாள் நகர செயலாளர் நூர் முகமது, முன்னாள் இளைஞரணி செயலாளர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் இன்று கட்சி அலுவலகத்துக்கு வந்து ஆலோசனை நடத்தினர். கட்சி பணிகளை மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக மாவட்ட துணைசெயலாளர் அற்புதவேல் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தை ஆளுகின்ற தகுதி சசிகலாவுக்கு மட்டுமே உள்ளது. அ.தி.மு.க. இயக்கத்தை காக்கின்ற சக்தி அவருக்கு உள்ளது. இந்தகட்சியை உடைத்துவிடலாம் என்று நினைப்பவர்களின் கனவு நிறைவேறாது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் மேல்சபை எம்.பி. லட்சுமணன் ஆகியோர் முதல்-அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்ததை யொட்டி அவர்களின் ஆதரவாளர்களும் விழுப்புரம் சிக்னல் அருகே பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

Similar News