செய்திகள்

அரியலூர் இளம்பெண் நந்தினி கொலை வழக்கு: இந்து முன்னணி பிரமுகர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2017-02-03 06:41 GMT   |   Update On 2017-02-03 06:41 GMT
அரியலூரில் இளம்பெண் நந்தினி கொலை வழக்கில் இந்து முன்னணி பிரமுகர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் இறந்து விட்டார். இவரது மகள் நந்தினி (வயது 17), கட்டிட சித்தாள் வேலைக்கு சென்று வந்தார்.

இவருக்கும் கீழமாளிகை கிராமத்தை சேர்ந்த இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் மணிகண்டன் (வயது 26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது, இருவரும் செல்போனில் பேசி பழகி உள்ளனர். நாளடைவில் நெருக்கமாகவும் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் 26-ந்தேதி நந்தினி திடீரென மாயமானார். அவரது தாயார் ராஜகிளி நந்தினியை பல இடங்களில் தேடினார். ஆனாலும் கிடைக்கவில்லை. மேலும் மணிகண்டன் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர் போலீசில் புகார் அளித்தார்.

இதற்கிடையே கீழமாளிகை கிராமத்தில் அழகு துரைக்கு சொந்தமான பாழும் கிணற்றில் நந்தினி நிர்வாண நிலையில் பிணமாக மிதந்தார்.

நந்தினியின் உடலை அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

அப்போது நந்தினி கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதை தொடர்ந்து இந்து முன்னணி பிரமுகர் மணிகண்டனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மணிகண்டன் நந்தினியை சம்பவத்தன்று அழைத்து வந்து வீட்டில் அடைத்து கற்பழித்து கொலை செய்ததாகவும், இதற்கு தனது நண்பர்கள் உதவியதாகவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.

நந்தினி கொலை வழக்கில் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினரும், அவர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

இந்தநிலையில் கைதான இந்து முன்னணி பிரமுகர் மணிகண்டனை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் கிரி பரிந்துரையின்பேரில் கலெக்டர் சரவணவேல்ராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து மணிகண்டன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Similar News