செய்திகள்

காஞ்சீபுரத்தில் வீட்டு முன்பு நிறுத்திய வாகனங்களை நொறுக்கி மர்ம கும்பல்

Published On 2017-02-01 22:52 IST   |   Update On 2017-02-01 22:52:00 IST
காஞ்சீபுரத்தின் முக்கிய பகுதியில் மர்ம நபர்கள் வாகனங்களை அடித்து உடைத்த சம்பவம் நகரத்தில் பெரும் பரபரப்பினையும் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தினையும் ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் நகராட்சிக் குட்பட்ட திருக்காலிமேடு மின்நகர், வீரசிவாஜி தெரு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  அவர்கள் தங்களுக்கு சொந்தமான கார்கள், வாகனங்களை வீட்டு வாசலிலேயே நிறுத்தி வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு கத்தி, உருட்டுக்கட்டையுடன் 10 பேர் கும்பல் அப்பகுதிக்கு வந்தனர். அவர்கள் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்ட கார், ஆட்டோக்களை நொறுக்கினர். மேலும் தெருவிளக்கு டியூப்லைட்டுகளையும் கல்வீசி உடைத்தனர். இதனால் அப்பகுதி இருட்டாக மாறியது.

வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்படும் சத்தம் கேட்டு சிலர் வீட்டில் இருந்து வெளியே வந்தனர். இதனை கண்ட கும்பல் அவர்களை பயங்கர ஆயுதங்களை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். பயந்து போன பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.

இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசுக்கு தொலைபேசியில்  தகவல் தந்தனர். போலீசார் வருவதை அறிந்ததும் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

அதே பகுதியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. அங்கு வந்த நபர்கள் மது போதையில் ரகளையில் ஈடுபட்டார்களா? அல்லது ரவுடி கும்பல் வாகனங்களை சேதப்படுத்தினார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

இது குறித்து தாலுகா போலீசார் வாகனங்களை சேதப்படுத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

கடந்த 10 வருடங்களாக இப்பகுதியில் சிறு திருட்டுகள் கூட நடந்தது இல்லை. ஆனால் இரவில் வந்த மர்ம நபர்கள் முதலில் தெரு விளக்குகளை அடித்து உடைத்து பின்னர் இருளில் இப்பகுதியில் உள்ள வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.

அந்த மர்ம நபர்கள் யார் என்றும் எதற்காக வாகனங்களை அடித்து உடைத்தனர் என்பதும் தெரியவில்லை. இதனை தடுக்க முயன்ற சிலரை மர்ம கும்பல் மிரட்டினர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

காஞ்சீபுரத்தின் முக்கிய பகுதியில் மர்ம நபர்கள் வாகனங்களை அடித்து உடைத்த சம்பவம் நகரத்தில் பெரும் பரபரப்பினையும் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தினையும் ஏற்படுத்தி உள்ளது.

Similar News