செய்திகள்

அ.தி.மு.க.வை அழிவில்லாமல் காக்க தீபாவால் தான் முடியும்: சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பேட்டி

Published On 2017-02-01 15:41 IST   |   Update On 2017-02-01 15:41:00 IST
ஜெயலலிதாவின் வாரிசான தீபா அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு நல்லது செய்வார் என்று சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கூறினர்.

சீர்காழி:

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். தீபாவும் விரைவில் அரசியலுக்கு வருவேன் என கூறி உள்ளார்.

இதனால் தீபா வீட்டில் தினமும் தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். தீபாவிற்கு முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். கோவை மலரவன், பொள்ளாச்சி சந்திர சேகரன், திருச்சி சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தற்போது சீர்காழி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சந்திரமோகன், மூர்த்தி ஆகியோரும் தீபாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அவர்கள் நேற்று சென்னையில் தீபாவை சந்திக்க சென்றனர். ஆனால் அப்போது தீபா வீட்டில் இல்லாததால் தீபாவின் கணவரை சந்தித்து பேசினார்கள்.

அவர்களுடன் தீபா பேரவை ஒருங்கிணைப்பாளர் வக்கீல் நெடுஞ்செழியன், ஒன்றிய மாணவரணி செயலாளர் திட்டை ரமேஷ், அன்புராஜ் உள்பட 25-க்கும் மேற்பட்டோர் சென்றனர்.

சந்திர மோகன் கடந்த 2001 முதல் 2006-ம் ஆண்டு வரை சீர்காழி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். மூர்த்தி 1991-ம் ஆண்டு முதல் 96-ம் ஆண்டு வரை எம்.எல்.ஏ.வாக இருந்தார். தீபாவுக்கு ஆதரவு தெரிவித்தது குறித்து அவர்கள் கூறியதாவது:-

எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதா மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தார். ஜெயலலிதாவின் வாரிசான தீபா அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு நல்லது செய்வார். நல்லா கட்சி பணியாற்றுவார்.

அ.தி.மு.க.வை அழிவில்லாமல் காக்க தீபாவால் மட்டுமே முடியும். கிராமப்புற இளைஞர்கள் மற்றும் தொண்டர்கள் ஆதரவு தீபாவிற்கு உள்ளது. எனவே நாங்களும் தீபாவை ஆதரிக்கிறோம்.

வருகிற சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தீபாவை சந்திக்க உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

Similar News