செய்திகள்

மலை பகுதியில் மிதமான மழை: பாபநாசம் அணை நீர்மட்டம் 39 அடியாக உயர்வு

Published On 2017-01-28 05:42 GMT   |   Update On 2017-01-28 05:42 GMT
மலை பகுதியில் பெய்துவரும் மிதமான மழையினால் பாபநாசம் அணை உள்ளிட்ட அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வருவதால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
நெல்லை:

வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. ஏற்கனவே வடகிழக்கு, தென்மேற்கு பருவ மழைகள் பொய்த்ததால் ஏற்பட்ட வறட்சியினால் அணைகள், குளங்கள் வறண்டு காணப்பட்டன.

மாவட்டத்தின் பிரதான பாசன அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் வெறும் 20 அடியாக குறைந்துபோனது. இதனால் விவசாயதேவை, குடிநீர் தேவைக்கு போதிய நீர் கிடைக்காமல் திண்டாடும் நிலை உருவானது. இந்த நிலையில் சமீபத்தில் பெய்துவரும் மழை நெல்லை மக்களை நிம்மதிபெருமூச்சு விட செய்துள்ளது. இந்த மழையினால் பாபநாசம் அணை உள்ளிட்ட அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வருவதால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 36.50 அடியாக இருந்தது. இன்று இந்த அணை மேலும் 2.50 அடி உயர்ந்து 39 அடியாக அதிகரித்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 977 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 204 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல சேர்வலாறு அணை நீர்மட்டம் 68.60 அடியாக உள்ளது.

118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் நேற்று 35.82 அடியாக இருந்தது. இன்று இது 39.90 அடியாக அதிகரித்து உள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சிவகிரியில் 25 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அணைப்பகுதி மற்றும் இதர பகுதி இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:

பாளை 12, பாபநாசம் 11, ஆய்க்குடி 8.2, அம்பை 7.4, தென்காசி 5.2, நாங்குநேரி 5, ராமநதி 5, சேர்மாதேவி 4, சேர்வலாறு 4, ராதாபுரம் 2.2, நெல்லை 2, சங்கரன்கோவில் 2, கடனா அணை 2, மணிமுத்தாறு 1.4, குண்டாறு 1.

Similar News