செய்திகள்

வடலூரில் இருந்து கேரளாவுக்கு இறைச்சிக்காக கடத்த முயன்ற 28 மாடுகள் பறிமுதல்

Published On 2017-01-22 09:43 GMT   |   Update On 2017-01-22 09:43 GMT
வடலூரில் இருந்து கேரளாவுக்கு இறைச்சிக்காக கடத்த முயன்ற 28 மாடுகளை ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் லாரி டிரைவருடன் சிறைப்பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
வடலூர்:

கடலூர் மாவட்டம் வடலூரில் மாட்டுச்சந்தை நடைபெற்றது. சந்தைக்கு வந்த வியாபாரி ஒருவர் 28 மாடுகளை விலைக்கு வாங்கி லாரியில் ஏற்றி கேரளாவுக்கு கொண்டு செல்ல இருப்பதாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவர்களுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவர்கள் மாட்டுச் சந்தைக்கு விரைந்து வந்தனர். மாடுகள் ஏற்றப்பட்டிருந்த லாரியை மடக்கினர். அதில் மாடுகள் நெருக்கமாக நிறுத்தப்பட்டு கயிறுமூலம் கட்டி வைத்திருந்தனர். அந்த லாரியை டிரைவருடன் சிறை பிடித்து வடலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். லாரியில் ஏற்றப்பட்டிருந்த 28 மாடுகள் மற்றும் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் லாரி டிரைவர் பொள்ளாச்சியைச் சேர்ந்த அய்யப்பன் (41) என்பதும், மீன்சுருட்டியைச் சேர்ந்த தேவமலை என்பவரிடம் டிரைவராக பணியாற்று வதும் தெரியவந்தது.

வடலூர் மாட்டுச்சந்தையில் விவசாயிகளிடம் இருந்து குறைந்தவிலைக்கு மாடுகளை வாங்கி இறைச்சிக்காக கேரளாவுக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.

Similar News