செய்திகள்
மாணவர்களின் போராட்டத்தில் பேரறிவாளனின் தாயார் கலந்து கொண்ட போது எடுத்த படம்

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் போராட்டம் - பேரறிவாளனின் தாயார் ஆதரவு

Published On 2017-01-20 08:57 GMT   |   Update On 2017-01-20 08:57 GMT
பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு வந்து மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.
சிதம்பரம்:

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் கடந்த 18-ந் தேதி வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் பல்கலைக்கழக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் அவர்கள் விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 3-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

பல்கலைக்கழகத்துக்கு வருகிற 22-ந் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. இருப்பினும் பெரும்பாலான மாணவர்கள் ஊருக்கு திரும்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்கும் வரை போராட்டம் தொடரும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர், சிதம்பரம் வர்த்தக சங்கத்தினர், பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பல்கலைக்கழகத்துக்கு வந்து மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினர்.

சிதம்பரம் அருகே உள்ள குமராட்சியில் இருந்து மாணவர்கள் 10 கிலோ மீட்டர் தூரம் நடைபயணமாக வந்து மாணவர்களின் போராட்டத்தில் பங்கேற்றனர். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளும் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு வந்து மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.

ஸ்ரீமுஷ்ணம் காமராஜர் சிலை அருகே இணையதள நண்பர்கள் இன்று 3-வது நாளாக தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

கொட்டும் பனியையும் பொருட்படுத்தாது இணையதள நண்பர்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்துக்கு பொது மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


Similar News