செய்திகள்
தபால் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடந்தபோது எடுத்த படம்.

ஆற்காட்டில் தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் விசாரனை

Published On 2017-01-19 04:43 GMT   |   Update On 2017-01-19 04:43 GMT
ஆற்காட்டில் உள்ள தலைமை தபால் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:

ஆற்காட்டில் ஜக் அக்ரகாரம் தெருவில் தலைமை தபால் நிலையம் உள்ளது. இங்கு நேற்று மாலை 5 மணியளவில் அலுவலக ஊழியர்கள் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் நிலையில் தொலைபேசி மணி அடித்தது. இதை தலைமை தபால் நிலைய அலுவலர் அன்பழகன் எடுத்து பேசினார்.

அப்போது எதிர்முனையில் பேசிய நபர் இந்தியும், தமிழும் கலந்து பேசியவாறு தபால் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும் அது சற்றுநேரத்தில் வெடிக்கும் என கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

உடனே இதுதொடர்பாக ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் போலீசார் மற்றும் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் நிபுணர்கள், வேலூரில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்பநாய் லூசியுடன் விரைந்து வந்து தபால் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். நீண்ட நேர சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு எதுவும் கண்டு பிடிக்கப்படவில்லை. போனில் வந்த தகவல் புரளி தான் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தபால் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News