செய்திகள்

பழவேற்காடு கடலில் ஐம்பொன் புத்தர் சிலை கண்டெடுப்பு

Published On 2017-01-17 08:53 IST   |   Update On 2017-01-17 08:53:00 IST
பழவேற்காடு கடலில் ஐம்பொன் புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டது. கடலில் கண்டெடுத்த புத்தர் சிலையை திருப்பாலைவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரிடம் ஒப்படைத்தனர்.
பொன்னேரி:

பொன்னேரியை அடுத்த பழவேற்காடு பகுதியில் நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு திரளான பொதுமக்கள் குவிந்து இருந்தனர். மீஞ்சூரை அடுத்த திருநிலை கிராமத்தைச் சேர்ந்த சங்கர் மற்றும் அவரது உறவினரான சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பெண் போலீஸ் சுமதி ஆகியோர் குடும்பத்தினருடன் பழவேற்காடு வந்து இருந்தனர்.

இவர்கள் அங்குள்ள லைட்அவுஸ் குப்பம் பகுதியில் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு மர்ம பொருள் அவர்களின் காலில் தட்டுப்பட்டது. அதை கையில் எடுத்து பார்த்தபோது சுமார் 3 அடி உயரம் உள்ள ஐம்பொன் புத்தர் சிலை என்பது தெரியவந்தது.

கடலில் கண்டெடுத்த புத்தர் சிலையை திருப்பாலைவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரிடம் ஒப்படைத்தனர். அவர், பொன்னேரி தாசில்தார் செந்தில்நாதனிடம் அதை ஒப்படைத்தார். அந்த சிலையை பெற்றுக்கொண்ட தாசில்தார் செந்தில்நாதன், இதுபற்றி தொல்பொருள் ஆய்வு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். தொல்பொருள் ஆய்வு அதிகாரிகளின் ஆய்வுக்கு பிறகே இந்த புத்தர் சிலை எந்த காலத்தில் செய்யப்பட்டது?, அதன் மதிப்பு என்ன? என்பது உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும் என பொன்னேரி வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News