செய்திகள்

உடுமலை அருகே புளியமரத்தில் கார் மோதி 2 போலீசார் பலி

Published On 2017-01-16 10:15 IST   |   Update On 2017-01-16 10:15:00 IST
உடுமலை அருகே இன்று காலை புளியமரத்தில் கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 2 போலீசார் பலியாகினர். இந்த விபத்து குறித்து உடுமலை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தெகப்பம்பட்டியை அடுத்து மாலக்கோவில் உள்ளது. சுற்றுலாத்தலமாக விளங்கும் இங்கு பொங்கலையொட்டி இன்று திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவில் உடுமலை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் வருவார்கள்.

இதையொட்டி பாதுகாப்பு பணிக்காக போலீஸ் காரர்கள் சரவணன் (வயது 25), சவுந்தர்ராஜ் (35) ஆகியோர் ஒரு காரில் சென்றனர். சரவணன் குடிமங்கலம் போலீஸ் நிலையத்திலும், சவுந்தர்ராஜ் குமரலிங்கம் போலீஸ் நிலையத்திலும் வேலை பார்த்து வந்தனர்.

உடுமலை அருகே உள்ள கோட்ட மங்கலம் பகுதியில் இன்று காலை 7.30 மணியளவில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது காரில் திடீரென ஆக்சில் உடைந்தது. இதனால் கார் நிலை தடுமாறி கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் சென்றது.

இதில் ரோட்டோரத்தில் இருந்த ஒரு புளியமரத்தில் கார் பயங்கரமாக மோதி அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரின் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி சரவணன், சவுந்தர்ராஜ் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் உடுமலை போலீஸ் டி.எஸ்.பி. விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பலியான போலீஸ்காரர்கள் சரவணன், சவுந்தர்ராஜ் ஆகியோர் உடல்களை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து உடுமலை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Similar News