காரைக்குடியில் கார் விபத்தில் மூதாட்டி பலி: 8 பேர் காயம்
காரைக்குடி:
சென்னை பெரியமேடு பகுதியைச் சேர்ந்தவர் அட்டானூர் ரகுமான் (வயது44). கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இவர், தனது உறவினர்கள் சிலருடன் பொங்கல் பண்டிகையையொட்டி ஒரு காரில் சுற்றுலாவாக ராமேசுவரம் புறப்பட்டார்.
இன்று காலை 4.30 மணி அளவில் திருச்சி -ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் காரைக்குடி அருகே உள்ள ஆவுடைபொய்கை பகுதியில் அந்த கார் வந்தது. அப்துல்காதர் (25) என்பவர் காரை ஓட்டி வந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், நிலைதடுமாறி அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மும்தாஜ் (60) சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் காரில் இருந்த முகமது சல்மான் (12), முகமது யூசுப் (9), ஆயிஷா சுல்தானா (5) ஆகிய 3 குழந்தைகள் உள்பட 8 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் முகமது யூனூஸ் (60), கார் டிரைவர் அப்துல் காதர் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து குன்றக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.