செய்திகள்
உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்.

காரைக்குடியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Published On 2017-01-10 12:32 IST   |   Update On 2017-01-10 12:32:00 IST
ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி காரைக்குடியில் இன்று கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்குடி:

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர், காளை வளர்ப்போர் மற்றும் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தற்போது இந்த போராட்டத்தில் மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர். சென்னை மற்றும் மதுரையில் நடந்த போராட்டத்தில் திரளான மாணவர்கள் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அழகப்பா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மஞ்சு விரட்டு மற்றும் ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து ஊர்வலமாக செல்ல முயன்றனர்.

இதற்கு போலீசார் அனுமதி அளிக்காததால், மாணவ, மாணவிகள் கல்லூரி நுழைவுவாயிலில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோ‌ஷங்களை எழுப்பிய மாணவர்கள், தடையை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

மாணவர்கள் போராட்டத்தையொட்டி அப்பகுதியில் டி.எஸ்.பி. கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

தடையை மீறி பேரணியாக சென்றால் மாணவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் எச்சரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Similar News