செய்திகள்

அரியலூர் அருகே காதல் திருமணம் செய்த வாலிபரின் வீடு சூறை

Published On 2017-01-08 21:49 IST   |   Update On 2017-01-08 21:49:00 IST
அரியலூர் அருகே காதல் திருமணம் செய்த வாலிபரின் வீடு சூறையாடப்பட்டது. குடிநீர் குழாயை உடைத்ததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள தெற்குப்பட்டியை சேர்ந்த செல்வராஜ் -மின்னல்கொடி தம்பதியினரின் மகள் ராமப்ரியா(வயது 24). இவரும் அதே ஊரை சேர்ந்த குருநாதன் மகன் ராஜேஷ்(27) என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு ராமபிரியா வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

இதில் ஆத்திரமடைந்த ராமப்பிரியாவின் சகோதரர் தனது நண்பர்களுடன் சென்று ராஜேஷ் வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடினார். மேலும் அப்பகுதி மக்கள் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தி வந்த ஆழ்குழாய் கிணற்றின் இணைப்பையும் அடித்து உடைத்தனர். இதன் காரணமாக குடிநீர் சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த பொதுமக்கள் , குடிநீர் குழாயை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அங்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் செந்துறை -ஜெயங்கொண்டம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு செந்துறை போலீசார் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.இந்த சம்பவம் தொடர்பாக ராமப்பிரியாவின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அங்கு பதற்றம் நிலவி வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Similar News