செய்திகள்
மீட்கப்பட்டவர்களை போலீசார் ஜீப்பில் அழைத்துச் சென்ற காட்சி

வலைக்கம்பெனியில் கொத்தடிமையாக பணியாற்றிய பெண்கள் உள்பட 18 பேர் மீட்பு

Published On 2016-12-30 05:50 GMT   |   Update On 2016-12-30 05:50 GMT
வலைக்கம்பெனியில் கொத்தடிமையாக பணியாற்றிய பெண்கள் உள்பட 18 பேர் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டர்களை காப்பகத்தில் ஒப்படைக்க கலெக்டர் நடவடிக்கை மேற்கொண்டார்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் அருகே அனந்தநாடார் குடியிருப்பு பகுதியில் உள்ள வலை கம்பெனி ஒன்றில் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருப்பதாக கலெக்டருக்கு புகார் வந்தது.

புகாரின் அடிப்படையில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், வலை கம்பெனியில் சோதனை நடத்த குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலுவலர் குமுதா தலைமையிலான அதிகாரிகள், அந்த வலை கம்பெனிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வலை கம்பெனியில் குழந்தை தொழிலாளர்கள் உள்பட 18 பேர் கொத்தடிமைகளாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த 3 பெண் குழந்தைகள், 5 பெண்கள், 10 ஆண்களை மீட்டனர். மீட்கப்பட்டவர்கள் தமிழகம், ஒடிசா, பீகாரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

மீட்கப்பட்ட 18 பேரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தங்களுக்கு 3 மாத மாக சம்பளம் தரவில்லையென்றும், பெற்றோரிடம் பேச விடவில்லை. கம்பெனியை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. தங்களை தாக்கவும் செய்ததாக அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தனர்.

இந்த தகவல் கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மீட்கப்பட்ட 18 பேரையும் காப்பகத்தில் ஒப்படைக்க கலெக்டர் நடவடிக்கை மேற்கொண்டார்.

இதையடுத்து வடிவீஸ்வரம் பறக்கின்காலில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் 3 பெண் குழந்தைகள் உள்பட 8 பேரையும் ஒப்படைத்தனர். ஆண்கள் 10 பேரும் அதே பகுதியில் உள்ள மற்றொரு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீட்கப்பட்டது குறித்து இவர்களது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களிடம் இன்று மீட்கப்பட்டவர்கள் ஒப்படைக்கப்படலாம் என்று தெரிகிறது.

இதற்கிடையில் வலை கம்பெனி உரிமையாளர் இன்று மாலைக்குள் இவர்களுக்கு வழங்கவேண்டிய பண பலன்களை வழங்குவதாக தெரிவித்துள்ளார். வழங்காத பட்சத்தில் அவர் மீது போலீசில் புகார் அளிக்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.


Similar News