விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள துழாரம்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சந்திரபோஸ், விவசாயி. இவரது தாய்க்கு சொந்தமாக நிலம் உள்ளது. அந்த நிலத்தை தனது பெயருக்கு மாற்றி பட்டா வாங்குவதற்காக சூரியமணல் கிராம நிர்வாக அதிகாரி வைத்தியநாதனை அணுகினார். அப்போது அஅர் நிலத்தை மாற்றி பட்டா வழங்க வேண்டுமென்றால் தனக்குரூ.2500 தர வேண்டும் என்று லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சந்திரபோஸ், இதுகுறித்து அரியலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் வைத்தியநாதனை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டனர்.
அதன்படி கடந்த 22-8 -2012 அன்று ரசாயனம் தடவிய பணத்தை சந்திரபோசிடம் கொடுத்து அனுப்பினர். அவர் அந்த பணத்தை கொடுத்த போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வைத்தியநாதனை கையும் களவுமாக மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணை அரியலூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து வந்தநீதிபதி ரவி , இன்றுதீர்ப்பு கூறினார். அதில் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி வைத்தியநாதனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை ,ரூ.25ஆயிரம் அபராதம் விதித்ததோடு, அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தீர்ப்பளித்தார்.
லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது அரியலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.