செய்திகள்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கணவர்- மகனுடன் பெண் தீக்குளிக்க முயற்சி

Published On 2016-12-19 15:57 IST   |   Update On 2016-12-19 15:57:00 IST
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கணவர்- மகனுடன் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்த ஈட்டிவீரம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 65). இவரது மனைவி ருக்மணி (60). இவர்களது மகன் செந்தில்குமார் (40).

இந்த நிலையில் இன்று காலை ருக்மணி, தனது கணவர் மற்றும் மகனுடன் வந்தார்.

பின்னர் திடீரென 3 பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து ருக்மணி மண்எண்ணையை தனது உடலில் ஊற்றினார்.

அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் விரைந்து வந்து மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து 3 பேரையும் மீட்டனர்.

பின்னர் சுப்பிரமணி, ருக்மணி, மகன் செந்தில் குமார் ஆகியோரை திருப்பூர் தெற்கு போலீசார் கைது செய்தனர்.

இதைதொடர்ந்து ருக்மணி கண்ணீர் மல்க கூறியதாவது:-

எனது மகன் செந்தில் குமாருக்கு தொழிலுக்காக கடந்த 2013-ம் ஆண்டில் தனியார் பைனான்ஸ் நிறுவனத்திடம் ரூ.11 லட்சம் கடன் வாங்கினோம். இதற்காக வீட்டுடன் கூடிய 5.35 ஏக்கர் நிலத்தின் பத்திரத்தை அடமானமாக கொடுத்தோம்.

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக வட்டி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பைனான்ஸ் நிறுவனத்தினர் வீட்டு முன்பு வேலி அமைத்து வீட்டை காலி செய்ய தொந்தரவு செய்கிறார்கள்.

இதனால் நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News