செய்திகள்

ஜெயலலிதா மரணம்: தஞ்சை - நாகையில் அ.தி.மு.க.வினர் 3 பேர் அதிர்ச்சியில் சாவு

Published On 2016-12-06 13:29 IST   |   Update On 2016-12-06 13:29:00 IST
முறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு செய்தியைக் கேட்ட திருச்சி அ.தி.மு.க. வினர் 3 பேர் அதிர்ச்சியில் உயிரிழந்தனர்

மயிலாடுதுறை, டிச.6-

நாகை மாவட்டம் மயிலாடுதுறை லால்பகதூர் நகரைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (வயது 65) அ.தி.மு.க. தொண்டர். இவர் நேற்று மதியம் டி.வி செய்தியை பார்த்து கொண்டு இருந்தார். அதில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற தகவலை கேட்டதும் அவர் மிகுந்த வேதனை அடைந்தார்.

சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். சிவப்பிரகாரத்தின் மகன் செந்தமிழன் அ.தி.மு.க. முன்னாள் நகர செயலாளராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா நேற்று மாலை மரணமடைந்தார் என்ற தகவல் பரவியதால் மயிலாடுதுறையில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் கடைவீதி வெறிச்சோடியது. பஸ்கள் அனைத்து திடீரென நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

பலர் அருகில் உள்ள தங்களது ஊருக்கு நடந்தே சென்றனர். நீண்ட தூரபயண மேற்கொள்ள வேண்டிய பயணிகள் தனியார், அரசு பஸ்கள் இயக்கப்படாததால் ரெயில் நிலையம் சென்று ரெயில்களில் பயணம் மேற்கொண்டனர். இதன் காரணமாக ரெயில்களில் வழக்கத்துக்கு மாறாக கூட்டம் நிரம்பி வழிந்தது.

முதியவர்கள், பெண்கள் கூட்ட நெரிசல் காரணமாக மிகவும் சிரமப்பட்டனர் மயிலாடுதுறையில் இன்று காலையும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருநதன. பெட்ரோல் பங்குகள் செயல்படாததால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆயக்காரன் புலம் -3 பஞ்சாயத்து சிங்கன் குத்தகை பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (77). அ.தி.மு.க. உறுப்பினர்.

ஜெயலலிதா உடல் நலம் குறித்து அறிந்த அவர் தன் மனைவி பொன்னம்மாளிடம் அம்மாவே இல்லை. நான் ஏன் உயிரோடு இருக்க வேண்டும் என்று கவலையுடன் கூறிக் கொண்டு இருந்துள்ளார்.

மனைவி வெளியே சென்றிருந்த நேரத்தில் காளியப்பன் வீட்டுக்கு வெளியே சென்று பூச்சி கொல்லி மருந்தை தின்று விட்டார். இதில் மயங்கி விழுந்து இறந்தார்.காளியப்பனுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள கொள்ளுக்காடு காரிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையன். இவரது மனைவி பார்வதி (55). எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அ.தி.மு.க.வில் தீவிர தொண்டர். இவர் நேற்று மாலை டி.வி.பார்த்து கொண்டிருந்த போது முதல்-அமைச்சர் உடல் நலம் குறித்து அறிந்து அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தார்.

அவரது வீட்டிற்கு அ.தி.மு.க. பிரமுகர்கள் சென்று அஞ்சலி செலுத்தினர்.

Similar News