ஜெயலலிதா மறைவு: ஈரோடு அ.தி.மு.க.பிரமுகர்கள் 3 பேர் அதிர்ச்சியில் சாவு
ஈரோடு:
முதல் அமைச்சா ஜெயலலிதா கவலைக்கிடமாக இருப்பதை அறிந்த ஈரோடு மாணிக்கம் பாளையத்தை சேர்ந்த ராஜ் என்ற அ.தி.மு.க. தொண்டர் நேற்று திடீர் என்று இறந்தார்.
இந்த நிலையில் ஈரோட்டை சேர்ந்த அ.தி. மு.க. பிரமுகர் ஒருவரும் ஜெயலலிதா இறந்த அதிர்ச்சியில் இறந்து போனார். ஈரோடு திருநகா காலனி மாதவ காடு என்ற இடத்தை சேர்ந்த இவரது பெயர் எம்.ஜி.ஆர். தாசன் என்ற சிதம்பரம் (வயது 48).
35 வருடமாக அ.தி.மு.க. வில் இருந்த இவர் 13-வது வார்டு வட்ட செயலாளராகவும் இருந்தார். ஜெயலலிதா மிகவும் கவலைக்கிடமாக அறிந்ததில் இருந்தே எம்.ஜி.ஆர். தாசன் சோகமாக அழுது கொண்டே இருந்தார்.
இந்தநிலையில் நேற்று ஜெயலலிதா இறந்ததை கேள்விப்பட்டதும் இவர் “புரட்சி தலைவி அம்மா” என்று கதறி அழுதபடியே அதிர்ச்சியில் சுருண்டு விழுந்தார்.
மயக்க நிலையில் இருந்த அவரை உடனே ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று இரவே எம்.ஜி.ஆர்.தாசன் இறந்து போனார்,
இவருக்கு மகேஷ்வா என்ற மனைவியும், நீதி மொழி, சிவரஞ்சனி, நீதியரசி என்ற 3 மகள்களும், பேரழகன் என்ற மகனும் உள்ளனர். இவரது உடலுக்கு ஏரளானமான அ.தி.மு.க.வினா அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல் மற்றொரு அ.தி.மு.க பிரமுகர் அதிர்ச்சியில் இறந்துள்ளார்.
மொடக்குறிச்சி அடுத்த எழுமாத்தூர் ஊராட்சி கழக செயலாளராக இருந்தவர் கதிர்வேல் (47). அரிசி வியாபாரம் பார்த்து வந்தார். எழுமாத்தூர் மண் கரடு வண்ணான் பாறையில் வசித்து வந்தார்.
1990 முதல் மண்கரடு அ.தி.மு.க கிளை செயலாளராகவும் 1996 முதல் தற்போது வரை எழுமாத்தூர் ஊராட்சி செயலாளராகவும் இருந்தார்.
முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குன்றி அப்பலோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது முதல் கதிர்வேல் சோகமாக காணப்பட்டார்.
முதல்வர் குணமாக வேண்டி பல்வேறு கோவில்களில் நடந்த சிறப்பு பூஜைகளிலும் கலந்து கொண்டார்.
முதல்வருக்கு மாரடைப்பு மிகவும் கவலைக்கிடம் என்ற செய்தியை கேட்டதும். கதறி.. கதறி அழுதார். அவரது குடும்பத்தினர் ஆறுதல் கூறினர். நேற்று வேதனையின் தூங்கியவர் அதன் பிறகு எழுந்திருக்கவே இல்லை.
இன்று (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் கட்சி பிரமுகர்கள் முதல்வர் படம் வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த ஊராட்சி செயலாளர் கதிர்வேல் வீட்டுக்கு வந்தனர்.
வீட்டில் தூங்கி கொண்டிருந்தவரை எழுப்பினர். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை. உடனடியாக அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்ததில் அவர் மாரடைப்பால் இறந்தது தெரியவந்தது.
இறந்த கதிர்வேலுவுக்கு சாரதாம்பாள் என்ற மனைவியும் ராகுல்குமார் என்ற ஒரு மகனும் உள்ளனர்.
நசியனூர் 15-வது வார்டு பகுதியில் வசித்து வந்த அ.தி.மு.க. பிரமுகர் சின்னசாமி (வயது 60). தீவிர அ.தி. மு.க. தொண்டராக இருந்து வந்தார்.
இன்று காலையில் இருந்து முதல்வர் ஜெய லலிதா மரணம் அடைந்ததையொட்டி மிகவும் வேதனையில் இருந்த அவர் அதிர்ச்சியில் மயங்கி விழுந் தார். சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார்.