செய்திகள்
கொலையுண்ட கலையரசன்

செங்கல்பட்டு அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை: 6 பேரிடம் விசாரணை

Published On 2016-12-04 07:33 GMT   |   Update On 2016-12-04 07:33 GMT
செங்கல்பட்டு அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக 6 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு:

செங்கல்பட்டை அடுத்த வல்லம், மிஷின் தெருவில் வசித்து வந்தவர் கலையரசன் (வயது 51). வல்லம் ஊராட்சியின் முன்னாள் தலைவரும், தி.மு.க. ஒன்றிய துணை செயலாளராகவும் இருந்தார்.

நேற்று இரவு அவர் செங்கல்பட்டில் இருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். வீட்டின் அருகே வந்த போது எதிரே மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் கும்பல் திடீரென கலையரசன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதினர்.

இதில் நிலை தடுமாறிய கலையரசன் கீழே விழுந்தார். உடனே மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டினர். இதில் கலையரசன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து செங்கல்பட்டு தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

போலீசார் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த தே.மு.தி.க. மாவட்ட பிரதிநிதி கண்ணதாசன் கொலைக்கு பழிக்குப்பழியாக கலையரசன் தீர்த்து கட்டப்பட்டு இருப்பது தெரிந்தது.

கடந்த 2011-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலின் போது வல்லம் ஊராட்சி தலைவர் பதவிக்கு கலையரசன் தனது தாயை நிறுத்தி இருந்தார். இதேபோல் அதே பதவிக்கு கண்ணதாசன் தனது அக்காளை போட்டியிட வைத்தார்.

இதில் கண்ணதாசனின் அக்காள் வெற்றி பெற்றார். இதனால் கண்ணதாசன் - கலையரசன் இடையே மோதல் முற்றியது. இந்த தகராறில் கடந்த 2012-ம் ஆண்டு கண்ணதாசன் மற்றும் அவரது நண்பர் சவுந்தர் கொலை செய்யப்பட்டனர். கண்ணதாசன் கொலை வழக்கில் 6-வது குற்றவாளியாக கலையரசன் சேர்க்கப்பட்டு இருந்தார். இதையடுத்து கண்ணதாசன் கொலைக்கு பழி தீர்க்க அவரது ஆதரவாளர்கள் கலையரசனை திட்டமிட்டு தீர்த்து கட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் கொலையில் தொடர்புடைய வல்லம், மேலமையூர் பகுதியை சேர்ந்த 6 பேர் போலீசில் சிக்கி உள்ளனர். அவர்களிடம் கொலைக்கான காரணம், கொலைக்கு வேறு யாரேனும் உடந்தையாக இருந்தார்களா? என்று விசாரணை நடந்து வருகிறது.

இச்சம்பவத்தால் வல்லம் பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டு உள்ளது. கடைகள் அடைக்கப்பட்டு உள்ளனர். ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

கலையரசனின் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத் திரியில் வைக்கப்பட்டு உள்ளது. பிரேத பரிசோதனை முடிந்து அவரது உடல் இன்று பிற்பகல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

கொலையுண்ட கலையரசனுக்கு ரூபி என்ற மனைவியும், 2 மகள், ஒரு மகன் உள்ளனர்.

Similar News