செய்திகள்
2 வயது மகனுடன் மனு கொடுக்க வந்திருந்த இளம்பெண் புவனேஸ்வரி.

மாயமான காதல் கணவரை 1½ வருடமாக தேடும் இளம்பெண்

Published On 2016-12-02 09:46 GMT   |   Update On 2016-12-02 09:46 GMT
பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து மாயமான காதல் கணவரை கண்டுபிடித்து தரும்படி இளம்பெண் எஸ்.பி.யிடம் கண்ணீர் மல்க மனு அளித்தார்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் புவனேஸ்வரி (வயது 22), இவரும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (25) என்பவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.

எனினும் பிரிய மனம் இல்லாத காதலர்கள் இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்து பிறகு பாதுகாப்பு கேட்டு அந்தியூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் இருவர் வீட்டு பெற்றோரை வரவழைத்தபோது இருவர் வீட்டாரும் காதல் திருமணத்தை ஏற்காமல் சென்று விட்டார்களாம்.

இதனால் காதலர்கள் ஈரோடு அருகே உள்ள கொங்கம்பாளையத்தில் தனிக்குடும்பம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனது பெயர் ஆசாந்த் 2 வயது ஆகிறது.

இந்த நிலையில் புவனேஸ்வரியின் காதல் கணவர் கார்த்திக் திடீரென மாயமாகி விட்டார். அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று தெரியவில்லை. கடந்த 1½ ஆண்டாக பல இடங்களில் அலைந்தும் திரிந்தும் பார்த்துவிட்டார். கணவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

தனது 2 வயது மகனுடன் கணவர் வீட்டுக்குப் போய் முறையிட்டார். அவர்கள், “எங்களுக்கும் அவனுக்கும் சம்பந்தம் இல்லை. நீயே போய் தேடி கண்டுபிடி” என்று விரட்டி விட்டார்களாம்.

இதனால் கண்ணீர் மல்க புவனேஸ்வரி இன்று (வெள்ளிக்கிழமை) தனது மகனுடன் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வந்து எஸ்.பி.யிடம் புகார் மனு கொடுத்தார்.

அதில் “1½ வருடமாக என் கணவரை தேடி வருகிறேன் கிடைக்கவில்லை. அவரது மாயம் மர்மமாகவே உள்ளது. என் கணவரை கண்டுபிடித்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறி உள்ளார்.

Similar News