செய்திகள்

நாகை அருகே பயிர் கருகியதால் மேலும் ஒரு விவசாயி மரணம்

Published On 2016-11-30 10:09 IST   |   Update On 2016-11-30 10:09:00 IST
நாகை அருகே பயிர் கருகியதால் மேலும் ஒரு விவசாயி மரணம் அடைந்தார். அவருடைய இறுதி சடங்கிற்கு சென்ற நண்பர் உயிரை விட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கீழ்வேளூர்:

நாகை மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள கீழையூரை சேர்ந்தவர் மாரிமுத்து (66) விவசாயி. இவர் தன்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தில் சம்பா சாகுபடி செய்வதற்காக நேரடி நெல் விதைப்பு செய்திருந்தார்.

கடந்த 5 ஆண்டுகளாக குறுவை சாகுபடி பொய்த்து போன நிலையில் இந்த ஆண்டு சம்பா கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் ஆற்றில் தண்ணீர் வராததாலும், பருவமழை கைவிட்டதாலும் பயிர்கள் முளையிலே கருகின.

இதனால் கடந்த சில நாட்களாக மாரிமுத்து மன உளைச்சலில் இருந்தார். இந்த நிலையில் தனது இளம் வயது முதல் நண்பராய் இருந்து பயிர் கருகியதால் இறந்த ராஜ் குமாரின் இறுதி சடங்கிற்கு சென்றார்.

பின்னர் வீடு திரும்பிய அவர் மயங்கி விழுந்து இறந்தார். பயிர் கருகியதால் அடுத்தடுத்து 2 விவசாயிகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இறந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு தமிழக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

Similar News