செய்திகள்

நிலக்கோட்டை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு

Published On 2016-11-24 11:41 GMT   |   Update On 2016-11-24 11:41 GMT
பனிப்பொழிவு காரணமாக வரத்து குறைந்துள்ளதால் நிலக்கோட்டை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.
நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் மிகப்பெரிய பூ மார்க்கெட் உள்ளது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து இங்கு தினமும் சராசரியாக 8 டன் பூக்கள் விற்பனைக்கு வரும்.

போதிய மழை இல்லாத நிலையில் தற்போது கடும் பனிப்பொழிவு இருப்பதால் பூக்கள் செடிகளிலே வதங்கி விடுகின்றன. இதன் காரணமாக பூக்கள் வரத்து குறைந்துள்ளது.

10 கிலோ கிடைக்க வேண்டிய இடத்தில் 300 கிராம் பூக்களே கிடைக்கின்றன. இதன் காரணமாக நிலக்கோட்டை மார்க்கெட்டில் பூக்கள் விலை அதிகரித்துள்ளது.

பனிப்பொழிவு காரணமாக மல்லிகை செடிகள்தான் அதிகமாக பாதிக்கப்படுகிறது. இதனால் மல்லிகை வரத்து மிகவும் குறைந்துவிட்டது. கிலோ ரூ.300க்கு விற்கப்பட்ட மல்லி தற்போது ரூ.700ஆக அதிகரித்துவிட்டது. விலை அதிகரித்தபோதும் பூக்கள் விளைச்சல் இல்லாததால் விவசாயிகளுக்கு போதிய லாபம் கிடைக்கவில்லை.

கனகாம்பரம் ரூ.350, பிச்சி ரூ.200, சம்மங்கி ரூ.30, கோழிக்கொண்டை ரூ.30, செண்டு ரூ.20, வாடாமல்லி ரூ.20-க்கு விலைபோகிறது.

Similar News