செய்திகள்
நோய்வாய்பட்ட விஸ்வநாதனை உறவினர்கள் கைத்தாங்கலாக அழைத்து வந்த காட்சி.

சிகிச்சை பெற பணம் இல்லாமல் காசநோயாளி திண்டாட்டம்

Published On 2016-11-18 15:31 IST   |   Update On 2016-11-18 15:31:00 IST
ஈரோட்டில் பணம் பெறுவதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த காசநோயாளியை உறவினர்கள் தூக்கி கொண்டு வந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
ஈரோடு:

பழைய நோட்டுகளை மாற்ற வங்கிகளில் தொடர்ந்து கூட்டம் அலை மோதிய வண்ணம் உள்ளது. வங்கியில் ரூ.2000 கொடுப்பதை கூட பொதுமக்களால் மாற்ற முடியவில்லை.

ஈரோடு கொல்லம் பாளையத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் ஈரோடு ரெயில்வே குட்ஷெட்டில் தொழிலாளியாக வேலை பார்க்கிறார்.

திடீரென இவருக்கு காசநோய் ஏற்பட்டது. இதனால் இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை பெற இவருக்கு மேலும் பணம் தேவைப்பட்டது. ஸ்டேட் வங்கி கணக்கில் பணம் உள்ளது. சிகிச்சைக்காக பணம் எடுக்க இவரது உறவினர்கள் வங்கிக்கு சென்றனர். வி‌ஷயத்தை கூறி பணம் கேட்டனர். நீண்ட வரிசையில் காத்திருந்து பணத்தை கேட்டனர்.

ஆனால் வங்கி ஊழியர்கள் “கணக்கில் பணம் இருப்பவர் கண்டிப்பாக வர வேண்டும். அவர் வந்தால்தான் பணம் கொடுப்போம்” என்று கூறி விட்டார்களாம்.

வேறு வழியின்றி ஆஸ்பத்திரியில் 2 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் விசுவநாதனை அவரது உறவினர்கள் வங்கிக்கு தூக்கி கொண்டு வந்தனர்.

ஸ்டேட் வங்கியில் நீண்ட வரிசையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவரால் செல்ல முடியவில்லை. இதை கண்டு பரிதாபப்பட்டு கூட்டத்தில் நின்ற மக்கள் முதலில் அவரை செல்ல வழிவிட்டனர்.

இதையொட்டி அவரை 2 உறவினர்களும் கைத்தாங்கலாக வங்கிக்கு அழைத்து கொண்டு சென்றனர். அங்கு அவர் கையெழுத்திட்டு சிகிச்சைக்கு பணம் எடுத்து சென்றார்.

இது குறித்து விஸ்வநாதன் மற்றும் அவரது உறவினர்கள் ஆவேசமாக கூறும்போது, “இது ஒரு மோசமான திட்டம். இதனால் எங்களை போன்ற ஏழைகள்தான் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அது என்னமோ... மை வைத்தால்தான் பணம் கொடுப்பாங்களாமே... எங்க பணத்தை வாங்குவதற்கு எதற்குங்க மை?” என்று கூறினர்.

Similar News