செய்திகள்

கொடுமுடி அருகே மஞ்சள் பயிர் கருகியதால் விவசாயி தற்கொலை

Published On 2016-11-14 13:47 IST   |   Update On 2016-11-14 13:47:00 IST
கொடுமுடி அருகே தண்ணீர் இல்லாமல் மஞ்சள் பயிர் கருகியதால் வி‌ஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் இருப்பு இல்லாததால் வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்து உள்ளனர்.

இந்த நிலையில் தண்ணீர் இல்லாமல் தனது மஞ்சள் பயிர் கருகியதால் ஈரோடு மாவட்ட விவசாயி ஒருவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கொடுமுடி அருகே உள்ள கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 56) இவருக்கு சொந்தமான 3½ ஏக்கர் விவசாய நிலத்தில் மஞ்சள் பயிரிட்டிருந்தார். இதேபோல் இவரது மருமகன் கொளத்துப்பாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியமும் தான் குத்தகைக்கு எடுத்திருந்த 10 ஏக்கர் விவசாய நிலத்தில் மஞ்சள் பயிரிட்டிருந்தார்.

இவர்களின் நிலத்தின் பாசன பகுதிக்குட்பட்ட காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் கிடையாது.

தண்ணீர் இல்லாததால் நன்கு வளர்ந்திருந்த மஞ்சள் பயிர்கள் கருகத் தொடங்கியது. இதை பார்த்து விவசாயி ராமலிங்கம் மன வேதனை அடைந்தார்.

சாகுபடி செய்யப்பட்ட தனது மஞ்சள் செடிகளும், மருமகன் மஞ்சள் பயிர்களும் கருகி விட்டதே என்று தனது நண்பர்களிடம் கூறி மிகவும் மனம் நொந்தார்.

இந்த நிலையில் விவசாயி ராமலிங்கம் நேற்று மாலை 4.30 மணி அளவில் மஞ்சள் பயிருக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டார். இதனால் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்தார்.

இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு கொடுமுடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விவசாயி ராமலிங்கம் நள்ளிரவில் பரிதாபமாக இறந்தார்.

விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரவியதையொட்டி ஈரோடு அரசு ஆஸ்பத்திரி முன் இன்று காலை முதல் மற்ற விவசாயிகளும் விவசாய சங்கத்தை சேர்ந்த பிரமுகர்களும் திரண்டனர். மேலும் உறவினர்களும் திரண்டதால் ஆஸ்பத்திரி முன் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இன்று காலை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் விவசாயி ராமலிங்கம் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

Similar News