செய்திகள்
தீ விபத்தில் குடிசை வீடுகள் எரிந்து சாம்பலாகி கிடப்பதை படத்தில் காணலாம்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே 14 குடிசை வீடுகள் தீயில் எரிந்து சாம்பல்

Published On 2016-11-11 08:11 IST   |   Update On 2016-11-11 08:11:00 IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே 14 குடிசை வீடுகள் தீயில் எரிந்து சாம்பலானது.
ஸ்ரீபெரும்புதூர் :

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டரம்பாக்கம் ஊராட்சியில் ஏராளமான கூலித்தொழிலாளர்கள் ஓலை குடிசை வீடுகளில் அருகருகே வசித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு இதில் ஒரு குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகத்தால் தீ மளமளவென அருகில் இருந்த மற்ற குடிசைகளுக்கும் பரவியது.

குடிசை வீடுகளில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்து உயிர் தப்பினர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குடிசைகளில் எரிந்த தீயை நீண்ட நேரம் போராடி அணைத்தனர்.

தீ விபத்தில் முருகன், அன்பழகன், ராஜேஷ், யுவராஜ், சுரேஷ், சுரேஷ்குமார், ஏகவல்லி, கமல், கர்முபிந்தானி, லட்சுமிபிந்தானி, காகேஷ்சர்ஷெட்டி, அரவிந்த் தால், சஞ்சய் ஷெட்டி, சரோஜ்குமார் ஷெட்டி ஆகிய 14 பேரின் குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீக்கிரையாகின.

இதில் சுரேஷ்குமார் என்பவரது வீட்டில் வேலை ஆட்களுக்கு சம்பளம் கொடுக்க வைத்து இருந்த ரூ.8 லட்சம் தீயில் எரிந்து சாம்பலானது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுபற்றி ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தீ விபத்து நடந்த இடத்தை ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் தாமோதரன், வருவாய் ஆய்வாளர் சவுந்திரவடிவு, கிராம நிர்வாக அலுவலர் திவ்யா ஆகியோர் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். மேலும் அவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம், 10 கிலோ அரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்கினர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட தலா ரூ.5 ஆயிரம் பணம் அனைத்தும் 500 ரூபாய் நோட்டுகளாக இருந்தது. அந்த பணம் செல்லாது என்பதால் அவசரத்துக்கு அவற்றை மாற்ற முடியாதே என பாதிக்கப்பட்டவர்கள் வேதனையுடன் கேட்டனர்.

இதையடுத்து தாசில்தார் தாமோதரன், இது தொடர்பாக வங்கிக்கு ஒரு கடிதம் எழுதி கொடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்தார்.

Similar News