செய்திகள்

திட்டக்குடி அருகே கார் மரத்தில் மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

Published On 2016-10-24 11:50 GMT   |   Update On 2016-10-24 11:50 GMT
திட்டக்குடி அருகே கார் மரத்தில் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெண்ணாடம்:

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மாந்தோப்பு தெருவைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டியன் (வயது 56). வெளிநாட்டில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் சுந்தர பாண்டியன் தனது மனைவி ரேவதி (48), மகன் சக்திவேல் (16), மகள் கீர்த்தீஸ்வரி (15), சகோதரி சாந்தா (65) ஆகியோருடன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆன்மீக சுற்றுலா புறப்பட்டார்.

ராமேஸ்வரம், திருச்செந்தூர் மற்றும் பல்வேறு கோவில்களுக்கு சென்ற அவர்கள் நேற்று மாலை காரில் ஊருக்கு புறப்பட்டனர். சுந்தரபாண்டியன் காரை ஓட்டி வந்தார்.

கார் நள்ளிரவு 12½ மணி அளவில் கடலூர் மாவட்டம் ராமநத்தம்- திட்டக்குடி சாலையில் ராமநத்தம் அருகே வந்து கொண்டிருந்தது. திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர மரத்தில் மோதியது. இதில் கார் சுக்குநூறாக நொறுங்கியது.

இடிபாடுகளுக்குள் சிக் கிய சுந்தரபாண்டியனின் மனைவி ரேவதி, சகோதரி சாந்தா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பலியானார்கள்.

மற்ற 3 பேரும் படு காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் விபத்து குறித்து திட்டக்குடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 3 பேரையும் மீட்டு திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சக்திவேல் பரிதாபமாக இறந்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள கீர்தீஸ்வரி, சுந்தரபாண்டியன் ஆகியோர் திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விபத்து காரணாக அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆன்மீக சுற்றுலா சென்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்த 3 பேர் விபத்தில் பலியானது பெண்ணாடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News