செய்திகள்
வங்கிக்கு பூட்டுப்போட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம் அருகே அதிகாரியை கண்டித்து கூட்டுறவு வங்கிக்கு பூட்டுபோட்டு விவசாயிகள் போராட்டம்

Published On 2016-10-21 11:11 GMT   |   Update On 2016-10-21 11:10 GMT
விருத்தாசலம் அருகே அதிகாரியை கண்டித்து கூட்டுறவு வங்கிக்கு பூட்டுபோட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
விருத்தாசலம்:

விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சி கார்மாங்குடி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது.

இன்று காலை கார்மாங்குடி, வல்லியம், மேலப்பாளையூர், மருங்கூர் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் அங்கு வந்தனர்.

வங்கி செயலாளர் செல்வராஜிடம் விவசாய கடன் மற்றும் பயிர் கடன் கேட்டனர். அதற்கு அவர் விவசாயிகளை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து விவசாயிகள் கூட்டுறவு வங்கியை விட்டு வெளியே வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகாத வார்த்தைகளால் திட்டிய வங்கி செயலாளரை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.

விவசாய கடன் வழங்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாது என்று வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். போராட்டத்துக்கு தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் ராசவன்னியன் தலைமை தாங்கினார்.

பின்னர் கூட்டுறவு வங்கியின் முன்பக்க கதவை விவசாயிகள் இழுத்து பூட்டினார்கள். தொடர்ந்து அதிகாரியை கண்டித்து வங்கியின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தபோராட்டத்தினால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News