செய்திகள்

காஞ்சீபுரம்-திருவள்ளூரில் 2-வது நாளாக ரெயில் மறியல்: எம்.எல்.ஏ.க்கள் உள்பட 1000 பேர் கைது

Published On 2016-10-18 07:23 GMT   |   Update On 2016-10-18 07:23 GMT
காஞ்சீபுரம்-திருவள்ளூரில் 2-வது நாளாக ரெயில் மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் உள்பட 1000 பேரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்ததை கண்டித்தும், உடனடி யாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் நேற்றும், இன்றும் (18-ந் தேதி) ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்தன.

இதற்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று 2-வது நாளாக தமிழகம் முழுவதும் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

காஞ்சீபுரம் பழைய ரெயில் நிலையத்தில் இன்று காலை காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் சுந்தர் எம்.எல்.ஏ. தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

இதில் காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன், நகரச் செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், நிர்வாகிகள் பொன்மொழி, சுகுமார், வி.எஸ்.ராமகிருஷ்ணன், பி.எம்.குமார், சிறுவேடல் செல்வம், அப்துல் மாலிக், மாவட்ட விவசாயி அணி செயலாளர் சோழனூர் ஏழுமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அவர்கள் செங்கல்பட்டில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற மின்சார ரெயிலை மறித்தனர். மேலும் தண்டவாளத்தில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் சுந்தர், எழிலரசன் உள்பட 1000 பேரை போலீசார் கைது செய்தனர்.

மறியல் போராட்டத்தையடுத்து காஞ்சீபுரம் புதிய மற்றும் பழைய ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் தலைமையில் 250-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் 3-வது நடை மேடையில் புறப்பட்ட சென்னை சென்ட்ரல் செல்லும் மின்சார ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் திராவிட பக்தன், விவசாய அணி துணை அமைப்பாளர் ஆதிசேசன், ஒன்றிய செயலாளர்கள் ஜெயசீலன், கூலூர் ராஜேந்திரன் உள்பட 250 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதே போல் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் தே.மு.தி.க. நகர செயலாளர் மணிகண்டன் தலைமையில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற ஒன்றிய செயலாளர் ரஜினிகாந்த் உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கி.வேணு தலைமையில் மறியலில் ஈடுபட முயன்ற 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

ஆவடி ரெயில் நிலையத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர் நாசர் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் ரெயில் மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நாசர், முன்னாள் எம்.பி. கிருஷ்ண சாமி, ஆவடி நகர செயலாளர் ராஜேந்திரன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் பூவை ஜேம்ஸ், பவுன்குமார், நடுக்குத்தகை தலைவர் ரமேஷ், திருநின்றவூர் நடராஜன், ஆவடி நகர்மன்ற (பொறுப்பு) தலைவர் கலை.மா.சேகர் உள்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர்.

Similar News