செய்திகள்

காஞ்சீபுரம்-திருவள்ளூரில் ரெயில் மறியல் போராட்டம்: 600 பேர் கைது

Published On 2016-10-17 13:50 IST   |   Update On 2016-10-17 13:50:00 IST
காஞ்சீபுரம்-திருவள்ளூரில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர், அரசியல் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 600 பேரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசை கண்டித்தும், காவிரிநதிநீர் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையினை நிலைநாட்ட வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இன்று விவசாயிகள் சங்கத்தினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினரும் ரெயில் மறியல் செய்தனர். காஞ்சீபுரம்-திருவள்ளூர் மாவட்டத்திலும் மறியல் போராட்டம் நடைபெற்றது.

காஞ்சீபுரம் புதிய ரயில் நிலையத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மாநில துணை பொதுச் செயலாளர் தீனன் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் திருமால்பூர்- சென்னை கடற்கரை ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் மக்கள் நலகூட்டியக்கத்தின் சார்பினில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வளையாபதி தலைமையில் விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் காஞ்சீபுரம்-சென்னை பயணிகள் ரயிலை மறித்து போராட் டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் மத்திய அரசை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

கைதான அனைவரும் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட் டுள்ளனர். மறியல் போராட்டத்தையொட்டி, காஞ்சீபுரம் ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழரசன், தொகுதி செயலாளர் தென்னவன், நகர செயலாளர் அன்புச்செல்வன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில குழு உறுப்பினர் கண்ணன், வட்டார தலைவர் ரவி,

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட பொருளாளர் ஜெகதீசன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஊனை பார்த்தீபன், மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் மோகனன் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் ரெயில் மறியலில் ஈடுபட்டனர்.

அவர்கள் செங்கல்பட்டு- கடற்கரை மின்சார ரெயிலை மறித்து மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இதையடுத்து பாதுகாப் புக்கு நின்ற போலீசார் அவர்களை கைது செய்தனர். இந்த மறியல் போராட்டத்தில் சுமார் ½ மணி நேரம் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் சித்தார்த்தனன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் செங்குட்டுவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் நீலவனத்து நிலவன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் ரெயில் மறியலில் ஈடுபட முயன்றனர்.

அவர்களை திருவள்ளூர் டவுன் போலீசார் கைது செய்தனர். போராட்டத்தை யொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

Similar News