செய்திகள்

ஊராட்சி தலைவர் கொலை: தந்தையை கொன்றதால் பழிவாங்க 18 வருடம் காத்திருந்தோம்- கைதான அண்ணன்-தம்பி வாக்குமூலம்

Published On 2016-10-17 07:04 GMT   |   Update On 2016-10-17 07:04 GMT
ஊராட்சி தலைவர் கொலையில் தந்தையை கொன்றதால் பழிவாங்க 18 வருடம் காத்திருந்தோம் என கைதான அண்ணன் மற்றம் தம்பி வாக்குமூலம் அளித்துள்ளனர்.

திருவள்ளூர்:

வெள்ளவேடு அருகே உள்ள மேல்மணம்பேடு ஊராட்சி தலைவராக இருந்தவர் தங்கராஜ் (வயது 51). கடந்த 14-ந் தேதி அதிகாலை அதே பகுதியில் வாக்கிங் சென்ற போது மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இது குறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த அண்ணன்-தம்பியான ராஜேஷ், தினேஷ் மற்றும் அவர்களது நண்பர்கள் வீரா, அஜய், கணேசன், சரவணன், தேவராஜ், மாரிமுத்து, சசிதரன், விபின் ஆகிய 10 பேரை கைது செய்தனர்.

தந்தையை கொன்றதால் பழிக்கு பழியாக ராஜேசும், தினேசும் திட்டமிட்டு ஊராட்சி தலைவர் தங்கராஜை கொலை செய்தது தெரிய வந்தது.

இது குறித்து அண்ணன்- தம்பியான ராஜேஷ், தினேஷ் ஆகியோர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

கடந்த 1998-ம் ஆண்டு எங்களது தந்தை மனோகரன் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தங்கராஜ் சம்பந்தப்பட்டு இருந்தார்.

வழக்கு விசாரணையின் போது எங்களது தாயை சாட்சி சொன்னால் கொலை செய்து விடுவதாக தங்கராஜ் மிரட்டி இருக்கிறார். கொலை வழக்கில் இருந்தும் அவர் விடுதலை ஆகிவிட்டார்.

மேலும் எங்களது ஒரு ஏக்கர் நிலத்தையும் அபகரித்தார். இதையடுத்து நாங்கள் அதே பகுதியில் உள்ள சித்தப்பா வீட்டில் வளர்ந்தோம்.

அப்போது இருந்தே தங்கராஜை தீர்த்து கட்ட வேண்டும் என்று முடிவு செய்தோம். இதற்காக 18 வருடம் காத்திருந்தோம்.

தங்கராஜால் மேலும் சிலரும் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதையடுத்து அவர்களது உதவியுடன் தங்கராஜை தீர்த்துகட்டினோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளதாக போலீசார் கூறினர். கைதான ராஜேஷ், தினேஷ் உள்பட 10 பேரையும் போலீசார் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Similar News