செய்திகள்

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற வாலிபருக்கு 3 ஆண்டு ஜெயில்: ராமநாதபுரம் கோர்ட்டு தீர்ப்பு

Published On 2016-10-15 04:18 GMT   |   Update On 2016-10-15 04:18 GMT
முன் விரோதத்தில் சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயன்ற வாலிபருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியை சேர்ந்தவர் செல்லப்பாண்டியன். இவர் 2014-ம் ஆண்டு திருப்புல்லாணி போலீஸ் ஸ்டேசனில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றினார். அதே ஆண்டு செப்டம்பர் 2-ந்தேதி இரவு நேர ரோந்தில் இருந்தபோது மணல் கடத்தலில் ஈடுபட்ட காரான் கிராமத்தை சேர்ந்த கருப்பையா (வயது26), என்பவரை பிடித்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரையும் செல்லப்பாண்டியன் பறிமுதல் செய்தார்.

இந்த விரோதம் காரணமாக 2014 நவம்பர் 17-ந்தேதி இரவு பணி முடிந்து ஊருக்கு டூவீலரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டியன் சென்று கொண்டு இருந்தார். அப்போது டூவீலரில் பின் தொடர்ந்து வந்த கருப்பையா செல்லப்பாண்டியனை வெட்டினார். இதில், வலது காது துண்டானது.

இது குறித்து உச்சிப்புளி போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கருப்பையாவை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. கருப்பையாவுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயராஜ் தீர்ப்பளித்தார்.

Similar News