செய்திகள்

மேலும் தண்ணீர் திறக்க உத்தரவு: தமிழக எல்லையில் இன்று வாட்டாள் நாகராஜ் முற்றுகை

Published On 2016-09-20 05:40 GMT   |   Update On 2016-09-20 05:40 GMT
கன்னட சலுவளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் இன்று தமிழக-கர்நாடக மாநில எல்லையான புளிஞ்சூர் சோதனை சாவடியை முற்றுகையிடப் போவதாக அறிவித்து உள்ளார். அதனால் தமிழக-கர்நாடக மாநில எல்லையான புளிஞ்சூர் சோதனை சாவடியில் இரு மாநில போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
சத்தியமங்கலம்:

தமிழகத்துக்கு மீண்டும் நாளை முதல் 30-ந்தேதி வரை வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடகாவுக்கு காவிரி மேற்பார்வை குழு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவால் கர்நாடக மாநிலத்தில் தொடர்நது பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. கன்னட அமைப்பினரும் விவசாய சங்கத்தினரும் மீண்டும் பல போராட்டங்களில் இறங்கி உள்ளனர்.

தமிழகத்துக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் உள்ள கன்னட சலுவளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியத்துக்கு மேல் தமிழக-கர்நாடக மாநில எல்லையான புளிஞ்சூர் சோதனை சாவடியை முற்றுகையிடப் போவதாக அறிவித்து உள்ளார்.

இதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். எனினும் திட்டமிட்டப்படி தமிழக எல்லையில் முற்றுகை போராட்டம் நடக்கும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

இதையொட்டி இன்று காலை 7 மணிக்கெல்லாம் தமிழக-கர்நாடக மாநில எல்லையான புளிஞ்சூர் சோதனை சாவடியில் இரு மாநில போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.



வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்பினர் எந்த நேரத்திலும் வரக்கூடும் என்பதால் முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்களை கைது செய்து அழைத்து செல்ல போலீஸ் வாகனமும் மேலும் அசம்பாவிதம் சம்பவத்தை தடுக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்க வாகனமும் சாம்ராஜ் நகரிலிருந்து வரவழைக்கப்பட்டு எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் எல்லையில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.

காவிரி நீர் பிரச்சனையால் இன்று 15-வது நாளாக சத்தியமங்கலம் வழியாக தமிழக பஸ்களும் வாகனங்களும் செல்லவில்லை. இதனால் இருமாநில பயணிகளும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார்கள்.

Similar News