செய்திகள்

அரசு வழங்கிய நிலத்தில் வீடு கட்ட அனுமதி கோரி கிராம மக்கள் 3-வது நாளாக உண்ணாவிரதம்

Published On 2016-09-19 06:08 GMT   |   Update On 2016-09-19 06:09 GMT
அரசு வழங்கிய நிலத்தில் வீடு கட்ட அனுமதி கோரி கிராம மக்கள் 3-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை உண்ணாவிரதம் இருந்த கோவிந்தம்மாள், சரோஜா ஆகியோருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
பொன்னேரி:

பழவேற்காடு அருகே உள்ள கரிமணல் கிராம மக்கள் அரசு ஒதுக்கிய நிலத்தில் வீடு கட்ட அனுமதி வழங்க கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் அப்பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் அரசு ஒதுக்கிய இடத்தில் வீடு கட்டிக் கொள்ளவும், பட்டா கேட்டும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்காக அவர்கள் அங்கு தற்காலிக கொட்டகை அமைத்துள்ளனர். 2-வது நாளான நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் தனது உடலிலை மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அவரை அப்பகுதி மக்கள் மற்றும் போலீசார் தடுத்து காப்பாற்றினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், வேணுகோபால் எம்.பி., சிறுணியம் பலராமன் எம்.எல்.ஏ., தாசில்தார் சண்முகம் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.

3 நாட்களுக்குள் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேச்சு வார்த்தைக்கு மாவட்ட கலெக்டர் வரவேண்டும் அதுவரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்து விட்டனர்.

இதைத் தொடர்ந்து கிராம மக்களின் போராட்டம் இன்று 3-வது நாளாக நீடித்தது. நேற்று இரவு பலத்த மழை பெய்ததால் உண்ணாவிரத பந்தலில் இருந்தவர்கள் கடும் அவதி அடைந்தனர். கொட்டும் மழையிலும் அவர்கள் நனைந்தபடி போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை உண்ணாவிரதம் இருந்த கோவிந்தம்மாள், சரோஜா ஆகியோருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர்கள் அங்கேயே மயங்கி விழுந்தனர்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பலர் சோர்வடைந்து காணப்படுகிறார்கள். அவர்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

உண்ணாவிரத பந்தல் அருகே பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

Similar News